கொரோனா தொற்று: இலங்கையில் 7 ஆவது மரணமும் பதிவானது – உலகில் இதுவரை 88,000 பேர் உயிரிழப்பு!

Thursday, April 9th, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மற்றும் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்தார்.

ஐ.டி.எச் எனப்படும் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில் சிகிச்சை பெற்றுவந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு நேற்று உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கல்கிஸை பிரதேசத்தை சேர்ந்த மாணிக்கக்கல் வர்த்தகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் அண்மையில் ஜேர்மனிக்கு பயணம் மேற்கொண்டு நாடு திரும்பியவர் எனத் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமான மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றுறுதியான மேலும் 4 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.

இந்த நாட்டில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 189 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு அறிவித்துள்ளது.

அவர்களில் 44 பேர் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்த நிலையில், 138 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றன.

இதேவேளை, தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்த மேலும் 33 பேர் இன்றைய தினம் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து வெளியேறவுள்ளனர் என இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதுவரையில் 3 ஆயிரத்து 415 பேர் தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்து தத்தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதேவேளை தற்போது ஆயிரத்து 262 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 44 பேர் இத்தாலியிலிருந்து நாடு திரும்பியவர்கள் என இராணுவ ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இந்நிலையில் கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 இலட்சத்து 13 ஆயிரத்து 203ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் இந்த தொற்றால் இதுவரை 88,000 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: