கொரோனா சவால்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்புச் செய்யும் தொழிலாளர்களை கௌரவிக்க வேண்டும் – மேதின செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, May 1st, 2020

கொரோனா வைரஸ் தொற்று சவால்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் தொழிலாளர்களை கௌரவிக்க வேண்டும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  இந்த நெருக்கடியான நிலையில் அர்ப்பணிப்புடன் உழைக்கும் மக்களுக்கு கௌரவத்தையும் வணக்கத்தையும் தெரிவித்து கொள்வதில் பெருமிதம் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது –

வரலாறு முழுவதிலும் நாம் எதிர்நோக்கிய சவால்கள், வெற்றி கொண்ட சவால்கள் ஏராளம். இவ்வாறான அனைத்து சந்தர்ப்பங்களிலும் நேரடியாக முன்னரங்கில் இருந்து சவால்களை வெற்றிகொண்டவர்கள் உழைக்கும் வர்க்கத்தினரேயாவர்.

கடந்த காலங்களில் அனைத்து சவால்களையும் உழைக்கும் மக்களின் ஒத்துழைப்புடன் வெற்றிகொண்டது போன்று இந்த கொவிட்-19 சவாலையும் நிச்சயம் வெற்றிகொள்வோம். சர்வதேச தொழிலாளர் தினமானது உழைக்கும் மக்களின் ஒற்றுமையை, பலம், புரட்சிகரமான குணம் ஆகியவற்றை உலகிற்கு எடுத்தியம்பும் ஒரு சந்தர்ப்பமாகும்.

உலகளாவிய ரீதியில் தொற்றுநோய் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதனால் உழைக்கும் மக்கள் தங்களது தொழிலாளர் தினத்தை கொண்டாட முடியாதுள்ளது. எனினும், நல்ல சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான உழைக்கும் மக்களின் திடசங்கற்பத்தில் துளியும் மாறுதல் இருக்காது என்பதே எனது நம்பிக்கையாகும்.

எமது அரசாங்கம் நாட்டின் எவ்வாறான நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் உழைக்கும் மக்களின் வாழ்க்கைக்கு குந்தகம் ஏற்படுத்தவில்லை.

உழைக்கும் மக்களின் வாழ்க்கையை பாதுகாப்பாக்குவதே எமது ஒரே நோக்கமாகும். கடந்த ஆண்டில் மே தினக் கொண்டாட்டங்களுக்கு மிலேச்ச பயங்கரவாத தாக்குதல் காரணமாக வரையறைகள் விதிக்க நேரிட்டது.

மிலேச்சத்தனமான பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த போதிலும் உலக தொற்று நோய் பரவல் காரணமாக இம்முறையும் மே தினக் கூட்டாங்கள் பேரணிகள் நடத்தப்படாது. எனினும் நியாயமான உரிமைகளுக்கான போராட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும்.

இலங்கை மக்களையும் நாட்டின் பொருளாதாரத்தையும் புதிதாக கட்டியெழுப்பும் கூட்டு முயற்சிக்கு சர்வதேச தொழிலாளர் தின பிரார்த்தனை வலு சேர்க்கட்டும் என தெரிவித்துள்ளார்.

Related posts: