கிளிநொச்சி பிரதான பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் குறித்து ஆராய்வு!

Friday, September 3rd, 2021

கிளிநொச்சி நகரின் பிரதான பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன் நேரில் பார்வையிட்டார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பணிப்புரைக்கமைய, பேருந்து கட்டடவாக்க பணிகளை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து அதை மேற்கொண்டுவரும் நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுடன் மேலதிக இணைப்பாளர் கலந்துரையாடினார்.

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் மாகாணசபையிடம் ஒப்படைக்கப்பட்ட இந்தப் பணிகள் ஆரம்பிக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டுவந்த நிலையில், தற்போதைய அரசாங்கத்தில் நகர அபிவிருத்தி அதிகாரசபை இந்தக் கட்டுமானப் பணிகளை பொறுப்பேற்று நடத்தி வருகிறது.

கட்டடவாக்க பணிகளின் பெரும்பகுதி நிறைவடைந்த நிலையில், அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வியாபார கொட்டகைகளால் பணிகள் தாமதமடைவதாக நகர அபிவிருத்தி அதிகாரசபையினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வனத்துக்குக் கொண்டு வந்திருந்தனர்.

இதனையடுத்து, இதுகுறித்து உடனடியாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமது மேலதிக இணைப்பாளர் றுஷாங்கனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணித்திருந்த நிலையில், அவர் அந்தப் பகுதிக்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்தார்.

பேருந்து கட்டடப் பகுதியில் சட்டரீதியற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 15 வரையிலான கடைகளை அப்புறப்படுத்துமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையிலும் அவை இன்னமும் அகற்றப்படாமை குறித்து இதன்போது கவனம் செலுத்திய மேலதிக இணைப்பாளர் றுஷாங்கன், இதுகுறித்து கரைச்சி பிரதேச செயலாளர் ஜெயகரன், மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன், கரைச்சி பிரதேசசபை தவிசாளர் வேழமாலிதன் ஆகியோருடன் கலந்துரையாடி இணக்கமான முறையில் பேருந்து நிலையத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள கடைகளை நீக்குவதற்கான ஏற்பாட்டைச் செய்தார்.

கட்டடவாக்கப் பணிகளுக்குத் தடையாகவிருக்கும் தற்காலிகக் கடைக் கொட்டகைகள் நீக்கப்பட்டுவிட்டால், நிர்மாணப் பணிகள் விரைவில் நிறைவுறுத்தப்பட்டு எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் பேரூந்து நிலையம் உத்தியோகபூர்வமாகச் செயற்படக்கூடியதாக இருக்கும் என்று நகர அபிவிருத்தி அதிகாரசபையின் நகரத் திட்டமிடல் அலுவலர் ராகவன் தெரிவித்தார்.

இதேவேளை, பேருந்து நிலையம் அமைந்துள்ள கிளிநொச்சி கனகபுரம் சந்தி அரசாங்கத்தின் 100 நகர அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் அபிவிருத்திசெய்யப்படவிருப்பதால், அந்தப் பணிகளும் டிசம்பரளவில் நிறைவுறுத்தப்பட்டுவிடும் என்றும் அவர் மேலும் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: