கிளிநொச்சி கால்நடை வளர்ப்போர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் தவநாதன் நடவடிக்கை!

Wednesday, December 30th, 2020

கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தி தீர்வுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன், ஸ்கந்தபுரம், கோணாவில், ஊற்றுப்புலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கால்நடை வளர்ப்போரை அக்கராயன் பகுதியில் நேரில் சந்தித்துக் கலந்துரையாடியபோது அவர்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வுக்கான ஏற்பாடுகளை அவர் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, மேய்ச்சல் தரை போதாமை, கால்நடைகளுக்கான தீவனத்தைப் பெற்றுக்கொள்வதிலுள்ள சவால்கள், வைக்கோலை பெற்றுக்கொள்வதில் உள்ள இடர்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கால்நடை வளர்ப்போர் தவநாதனின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.

இவை பற்றி விரிவாக ஆராய்ந்த ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளர் வை.தவநாதன், இதுகுறித்து மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ள விவசாயத்துறை தொடர்பான கலந்துரையாடலின்போது விசேட கவனம் செலுத்தி உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கலாம் என்று உறுதியளித்தார்.

மேய்ச்சல் தரைகளைப் பெற்றுக்கொள்ளல், காட்டு இலாகாவில் பொறுப்பிலுள்ள மேய்ச்சல் தரைகளை விடுவித்தல், கால்நடை தீவனமாக தொழில்முறை ரீதியாக புல் வளர்த்தல் என்பன தொடர்பாக ஏற்கனவே மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோர் கடந்த 17ஆம் திகதி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் ஆராய்ந்துள்ளர் என்பதை இதன்போது சுட்டிக்காட்டிய தவநாதன்,

மேலதிக நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனும் கலந்துரையாடி கால்நடை வளர்ப்போரின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வைப் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தார். பிரதேசத்தில் உள்ள சுமார் 10,000 மாடுகளுக்கும், முழு கிளிநொச்சி மாவட்டத்திலும் உள்ள 50,000 மாடுகளுக்கும் தேவையான மேய்ச்சல் தரைகள் மற்றும் தீவனங்களுக்கான ஏற்பாடுகளை விரைவில் பெற்றுத் தருவதாகவும் இதன்போது அவர் கால்நடை வளர்ப்போருக்கு உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: