கிராம புறங்களிலுள்ள பாடசாலைகள் வழமை போன்று நடைபெறும் – பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் கல்வி அமைச்சு ஆலோசனைக் கோவை வெளியீடு!

Sunday, June 26th, 2022

ஜூன் 27 ஆம் திகதிமுதல் ஜூலை மாதம் முதலாம் திகதிவரை கிராம புறங்களிலுள்ள பாடசாலைகள் வழமை போன்று நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், ஜூன் 27 ஆம் திகதி முதல் ஜூலை முதலாம் திகதி வரை பாடசாலை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய விதம் தொடர்பில் கல்வி அமைச்சு ஆலோசனைக் கோவை வெளியிட்டுள்ளது.

கிராமிய பாடசாலைகளுக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து சிக்கல் காணப்படுமாயின், அவர்களை தனிப்பட்ட விடுமுறையிலிருந்து விலக்கி, பொருத்தமான கால அட்டவணையை தயாரிக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த வாரம் பாடசாலை நடவடிக்கைகள் இடம்பெறாத நகர்ப்புற பாடசாலைகளில் வாரத்தில் மூன்று நாட்கள் மாத்திரம் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரை கல்வி நடவடிக்கைகள் நடத்தப்பட வேண்டும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள ஆலோசனைக் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நகர்ப்புற பாடசாலைகளின் கனிஷ்ட பிரிவிற்கான பாடசாலை நாட்களை தீர்மானிக்கும் அதிகாரம் அதிபர்களுக்கு வழங்கப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

பாடசாலைகள் நடைபெறாத நாட்களில் ஒன்லைன் மூலம் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

போக்குவரத்து சிக்கல் காரணமாக பாடசாலைகளுக்கு வருகை தர முடியாத ஆசிரியர்களுக்கு, குறித்த நாட்களை தனிப்பட்ட விடுமுறை நாட்களாக கருதிற்கொள்ளாது செயற்படுமாறும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: