கருத்து தெரிவித்துக்கொண்டிருக்காமல் ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவதற்கு ஒன்றுபடுங்கள் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச வலியுறுத்து!

Friday, April 30th, 2021

வெறுமனே கருத்து தெரிவித்துக்கொண்டிருக்காமல், விவசாயிகளுக்கு அறிவூட்டி ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் என்பனவற்றை பயன்படுத்தல் மற்றும் இறக்குமதி என்பனவற்றின் மீதான தடை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்காமல், இரசாயன பசளைகளைப் பயன்படுத்துவதை, முழுமையாக இல்லாதொழித்த உலகின் முதல் நாடாக, இலங்கையை மாற்றும் சவாலை தான் ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் – “ஆரோக்கியமான மற்றும் உற்பத்தித்திறன் வாய்ந்த குடிமகனை உருவாக்க நச்சு அல்லாத உணவுக்கான மக்களின் உரிமையை அரசாங்கம் உத்தரவாதம் செய்ய வேண்டும். அடுத்த பத்தாண்டுகளில் இலங்கையில் விவசாயத்திற்கு முழுமையாக சேதன உரங்களைப் பயன்படுத்த அந்த உற்பத்தியை துரிதப்படுத்த வேண்டும்.” என “சுபீட்சத்தின் நோக்கு“ கொள்கை பிரகடனத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அதனை யதார்த்தமாக்குவதற்கு அடித்தளமிடும் வகையில் காலநிலை மாற்றத்திற்கான நிலையான தீர்வுகளுடன் பசுமை சமூக – பொருளாதார மாதிரியை உருவாக்கும் நோக்கில் 20 அம்ச அமைச்சரவை பத்திரம் ஒன்று அண்மையில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

அதேநேரம் இரசாயன உரங்கள், களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றிற்கு பெரும் செலவு செய்த போதிலும், விவசாய உற்பத்தியில் தரமான அதிகரிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று சுட்டிக்காட்டியிருந்த ஜனாதிபதி மண் வளம் குறைந்து விளைச்சல் குறைந்து, பல்லுயிர் அழிவுக்கு வழிவகுத்துள்ளது. இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு ஆறுகள் மற்றும் நீரோடைகளை மாசுபடுத்துவதுடன், தரமான குடிநீர் விநியோகத்திற்கு கடுமையான சவாலாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறுநீரக நோய், புற்றுநோய் உள்ளிட்ட பல தொற்றா நோய்களுக்கான அரசாங்க செலவுகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகின்றன. கிராமப்புற மக்களின் வாழ்வாதாரங்கள் இழக்கப்படுதல், சுகாதார நிலைமைகள் மோசமடைதல் மற்றும் மக்களின் உற்பத்தித்திறன் குறைதல் ஆகியவை நாடு எதிர்கொள்ளும் சவாலாக மாறியுள்ளது.

அந்தவகையில் இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்பத்தில் சிக்கல்கள் ஏற்படலாம். ஆனால் ஒரு நிலையான பசுமை சமூக – பொருளாதார முறையை உருவாக்குவது தாமதமாகக்கூடாது. அத்துடன் எழுகின்ற பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகளை நாம் அடையாளம் காண வேண்டும்.

இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதை விட்டுவிடுவது உற்பத்தியைக் குறைக்கும் என்று விவசாயிகள் நினைக்கலாம். அப்படியானால், இரசாயன உர மானியத்திற்காக ஆண்டுதோறும் செலவிடப்படும் ரூ .50 பில்லியனில் இருந்து குறையும் வருமானம் ஈடு செய்யப்படும் என்று ஜனாதிபதி இதன்போது உறுதியளித்துள்ளார்.

அதேநேரம் நாடு மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய உணர்வும் முக்கியமானதாகும். இந்தத் திட்டம் தொடர்பில் விரும்பாதவர்கள் அல்லது வேறு வகையாக சிந்திப்பவர்கள் ஆரம்பத்திலேயே நீங்கிக் கொள்வதற்கு தடையில்லை என்றும் தெரிவித்த ஜனாதிபதி சவாலை வெற்றிகொள்ள தான் தனிப்பட்ட முறையில் விவசாய சமூகத்திடம் செல்வதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: