கம்பரெலிய என்ற திட்டத்தை வைத்து வக்காளத்து வாங்குவது வேடிக்கையாக உள்ளது – ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் யோகேஸ்வரி பற்குணராஜா!

Tuesday, March 12th, 2019

யுத்தத்தில் அழிந்துகிடந்த எமது தேசத்தை மீண்டும் அபிவிருத்தியால் தூக்கி நிறுத்த அன்றைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முயன்றபோது அதையெல்லாம் புறக்கணித்து தடுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தரப்பினர் இன்று இந்த மாநகரசபையின் அதிகாரத்தில் இருந்துகொண்டு அபிவிருத்திகள் தொடர்பில் பேசுவது வேடிக்கையாக உள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ் மாநகரசபையின் மாதாந்த அமர்வு முதல்வர் ஆர்னோல்ட் தலைமையில் இன்றையதினம் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கிராம எழுச்சி திட்டம் என்ற ஒரு திட்டத்தை வைத்துக்கொண்டு அதுவும் மத்திய அரசால் முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்தை உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களை புறக்கணித்து நேரடியாக செயற்படுத்த முற்படுகின்றனர்.

அபிவிருத்தி என்பது எமது மக்களுக்கு அவசியமாக தேவைப்படும் ஒரு விடயமாகும். அது எவர் மூலமாக நடைமுறைப்படுத்தப்பட்டாலும் அதை நாம் ஏற்று செயற்படுத்தி மக்களுக்கு கிடைக்கப்பெறவைக்கவேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக்கருத்துக் கிடையாது.

ஆனால்அன்று எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சராக இருந்தபோது எமது மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட அனைத்து அபிவிருத்திகளையும் புறக்கணித்திருந்தனர். அதுமட்டுமல்லாது அவற்றை தடுப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு மக்கள் மத்தியில் தவறான பிரசாரங்களை முன்னெடுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று தமது சுயநலன்களுக்கான கம்பரெலிய என்ற திட்டத்தை வைத்து வக்காளத்து வாங்குவது வேடிக்கையாக உள்ளது.

அந்தவகையில் கடந்த காலங்களில் நாம் எமது அபிவிருத்திச் செயற்பாடுகளை மாகாணத்தின் அதிகாரங்களுக்கு உட்பட்ட வகையில் முன்னெடுத்து நடைமுறைப்படுத்திக் காட்டியிருந்தோம் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts:


இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் அனைத்தும் இரத்து - சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக் அறி...
மின்கட்டணங்கள் செலுத்தப்படாமையினால் மின்சாரம் விநியோகிப்பதில் பாரிய நெருக்கடி - மின்சக்தி அமைச்சர் க...
சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுதலை மோட்டார் வாகன திணைக்களத்திடம் ஒப்படைக்க இராணுவம் நடவடிக்கை!