கடினமான சந்தர்ப்பங்களில் ஒன்றாக இருந்த, ஒரு நோக்கத்திற்காக போராடிய எவரையும் கைவிட முடியாது – பிரதமர் மஹிந்த தெரிவிப்பு!

Tuesday, November 2nd, 2021


கடினமான சந்தர்ப்பங்களில் ஒன்றாக, ஒரு நோக்கத்திற்காக போராட்டங்களை நடத்திய அனைத்து கட்சிகளும் ஒரு கொடியின் கீழ் ஒன்றாக இருக்க வேண்டும் எனவும், இந்த ஐக்கியத்தை பாதுகாக்க வேண்டியது பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொறுப்பு எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு தாமரை தடாகம் அரங்கில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 5வது ஆண்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –
சில கட்சிகள் சிறிய கட்சிகளாக இருக்கலாம், ஆனால், அரசியலில் முக்கியமானது சிறியது, பெரியது அல்ல, நோக்கமே முக்கியமானது. அவர்கள் எவரும் எமது துணையோ, ஊன்றுகோல்களோ, கைப்பாவைகளோ அல்ல.
அவர்கள் எம்முடன் இணைந்து ஒரு நோக்கத்திற்காக பயணிப்போர். ஐக்கியத்தை கை கூப்பி அழைப்பது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூலம் கிடைத்த பாரம்பரியம்.
கடினமான சந்தர்ப்பங்களில் ஒன்றாக இருந்த, ஒரு நோக்கத்திற்காக போராடிய எவரையும் கைவிட முடியாது. அரச அதிகாரம், அமைச்சுக்கள், அரச நிறுவனங்கள் இவற்றில் செய்ய முடியாதவைகள் பல இருக்கின்றன.
ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்பான பிரச்சினை முற்றியமைக்கும், விவசாயிகளில் ஆர்ப்பாட்டங்கள் இந்தளவுக்கு பாரதூரமாக நீண்டு சென்றுள்ளமைக்கும் அவர்கள் மத்தியில் வேலைகளை செய்யாததே காரணம்.
அரசாங்கம் மக்களின் குரலை புரிந்து கொள்ள வேண்டும். அரசாங்கம் இந்த அரசியலில் இருந்து விலகி சென்றால், தோற்கடிக்கப்பட்ட சக்திகள் குறுகிய இலாபங்களை பெறுவதற்காக மக்கள் மத்தியில் புகுந்து பாரிய சிக்கலை உருவாக்குவார்கள் என எச்சரித்துள்ளார்.
வாக்களித்த மக்கள் தற்போது மிகவும் சிரமமான, கஷ்டமான நிலைமையில் இருக்கின்றனர் என்பதை மறந்து விடக்கூடாது.
இப்படியான காலங்களில் அரசாங்கம் செய்யாத தவறுக்கும் மக்கள் அரசாங்கத்தின் மீதே குறை கூறுவார்கள். மக்கள் திட்டினாலும் பொம்மைகளை எரித்தாலும் அவர்களுக்கு மத்தியில் செல்ல வேண்டும் எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்
மேலும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை அருகில் வைத்து செயற்படுவதே சிறந்தது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் 5 ஆவது ஆண்டு பூர்த்தி நிகழ்வை முன்னிட்டு, கொழும்பு தாமரை தடாகக் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவின்றி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியால் ஆட்சி அமைக்க முடிந்தது.
அதற்காக தமிழ், முஸ்லிம் மக்களிடமிருந்து விலகியிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் தமிழ் மற்றும் முஸ்லிம் அடிப்படை வாத கட்சிகளின் ஆதரவின்றியே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆட்சியமைத்ததாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: