கச்சத்தீவு தேவாலய விழாவுக்காக தமிழகத்தைச் சேர்ந்த 100 பேருக்கு அனுமதி!

Thursday, December 22nd, 2016

கச்சத்தீவில் இலங்கை அரசால் புதிதாக கட்டப்பட்ட புனித அந்தோணியார் தேவாலய திறப்பு விழா எதிர்வரும் 23ம் திகதி (நாளை) நடைபெறவுள்ளது.  இந்த விழாவில் பங்கேற்பதற்காக இராமேசுவரம் தீவுப்பகுதியை சேர்ந்த பாதிரியார்கள், மீனவர்கள் உள்ளிட்ட பக்தர்கள் 100 பேர் படகில் செல்வதற்கு இந்திய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பங்கு தந்தைகள் சகாயராஜ், சந்தியா, ஜெகன் உள்பட 5 பங்கு தந்தைகளும், 5 கன்னியாஸ்திரிகளும், மீனவர்கள் சங்கத் தலைவர்கள் ஜேசு, எமரிட், போஸ், அல்போன்ஸ், சந்தியா மற்றும் மீனவர்கள் உள்பட 100 பேர் 3 படகுகளில் அந்தோணியார் ஆலயம் நோக்கி பயணிக்கவுள்ளனர்.

இது தொடர்பாக இராமேசுவரம் தாலுகா அலுவலகத்தில், இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் முருகானந்தம் தலைமையில் பல்துறை அதிகாரிகளின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், அனுமதி பெற்றவர்கள் மட்டுமே படகில் கச்சத்தீவு செல்ல வேண்டும். சிகரெட், மது போன்ற தடை செய்யப்பட்ட மற்றும் வர்த்தகரீதியான பொருட்களை கொண்டு செல்லக்கூடாது.

டிசம்பர் 23ம் திகதி அதிகாலை 05.00 மணிக்கு இராமேசுவரம் துறைமுக அலுவலகத்தில் சுங்க அதிகாரிகளின் சோதனை முடிந்து 06.00 மணிக்கு படகுகள் புறப்பட வேண்டும். இந்திய கடற்படை, கடலோர காவல்படை மற்றும் தமிழக மரைன் பொலிஸ் ரோந்து கப்பல்கள் பக்தர்கள் செல்லும் படகுகளை பாதுகாப்பாக அழைத்துச் சென்று, இந்திய கடல் எல்லையில் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்க வேண்டும்.  ஆலய திறப்பு விழா மற்றும் அர்ச்சிப்பு முடிந்து பகல் 12.00 மணிக்கு கச்சத்தீவில் இருந்து படகில் புறப்பட்டு மாலை 03.00 மணிக்குள் படகுகளில் சென்றவர்கள் இராமேசுவரம் வந்து சேர வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

m8

Related posts: