ஐ. நா சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் 37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாடு இலங்கையில்!

Saturday, January 13th, 2024

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் 37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையில் சுமார் 40 நாடுகளின் பங்கேற்புடன் இடம்பெறவுள்ளது.

முன்பதாக 36 ஆவது ஆசிய பசுபிக் பிராந்திய மாநாடு பங்காளதேஷத்தின் டாக்கா நகரத்தில் நடைபெற்றது.

குறித்த மாநாட்டில் கலந்து கொண்டிருந்த சகல நாடுகளினதும் இணக்கத்துடன் 37 ஆவது ஆசிய பசுபிக் பிராந்திய மாநாட்டை 2024 ஆம் ஆண்டில் 40 நாடுகளின் பங்குபற்றலில் இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் இம்மாநாட்டில், இம்முறை நாட்டின்பல சிவில் சமூகங்கள் ஒன்றிணைத்து எம்நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியில், எவ்வாறு உணவுத்தட்டுப்பாட்டை முகம் கொடுப்பது என்பது பற்றிய ஆலோசனைகளை கலந்துரையாடவுள்ளனர்.

இதில் விவசாயம் பால் பண்ணை மீன்பிடி உணவு விரயத்தை எவ்வாறு குறைப்பது பற்றி ஆலோசனைகளை முன்வைக்க உள்ளனர்.

இது தொடர்பான ஊடக சந்திப்பொன்று கடந்த 11 ஆம் திகதி கொழும்பு ரேணுகா விருந்தகத்தில் நடைபெற்றது.

இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த உலக மீனவர் சம்மேளனத்தின் செயலாளர் ஹேமன் குமார, “எமது நாடு மந்த போஷனையில் ஆப்கானிஸ்தானுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. இது மிகவும் கவனத்தில்கொள்ள வேண்டிய பாரதூரமாக விடயம்.

இந்நெருக்கடியை எவ்வாறு நாம் வெல்வது. எமக்கு உரித்தான கடல்வளத்தினை நடைமுறையிலுள்ள சில சட்டங்களால் பிறர் சுரண்டுகின்றனர்.

தற்போதைய சூழலில் 60 இலட்சம் ரூபா செலவில் கடலுக்குச் சென்று மீன்பிடியில் ஈடுப்பட்டாலும் எவ்வித இலாபமும் இல்லை.இதற்கு மேலதிகமாக மீனவர்களிடம் தண்டப்பணம் வசூலிப்பதால் பாரிய நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது.

உலக உணவு நிறுவனம் நிலையான அபிவிருத்தி பற்றி பேசுகிறது. இருப்பினும் எமது நாட்டு மக்கள் புரத தட்டுபாடு காரமணாக மந்தபோஷனை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கொழும்பில் மாத்திரம் 59 வீதமான குழந்தைகள் மந்த போஷனையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் சிவில் சமூகத்தினர் கவனம் செலுத்த வேண்டும். அன்றாட உணவுத்தேவைக்காக நாம் போராட வேண்டியுள்ளது. இலங்கையை மீளக்கட்டி எழுப்ப நாம் பாடுபட வேண்டும்.

இவ்விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் 37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாட்டில் ஆலோசனைகளை வழங்க தயாராக உள்ளோம்” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: