எமது ஆக்க இலக்கியப் படைப்புக்களுக்கான  ஆதரவுகள் போதுமானதாகக்  காணப்படவில்லை: யாழ். தேசிய  கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளர் கலாநிதி பா. தனபாலன்

Tuesday, April 26th, 2016

சமகால இலக்கியங்கள் வடமாகாணத்தில் அல்லது தமிழ் இலக்கியங்கள் இலங்கைத் தீவிலே எவ்வாறு நடை பயில்கின்றன ? அல்லது எவ்வாறான தாக்கங்களை உண்டு பண்ணுகின்றது என்பதை நோக்கும் போது எமது ஆக்க இலக்கியப் படைப்புக்களுக்கான  ஆதரவுகள் போதுமானதாகக்  காணப்படவில்லை. எங்களுடைய  வடமாகாண அரசு எமது  இலக்கிய வாதிகளையோ அல்லது எழுத்தாளர்களையோ ஊக்குவிக்கின்ற எந்தவொரு செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை.  மிக வேதனையான பல ஆக்கங்கள் வெளிவர வேண்டிய நிலையில் வெளியிட முடியாத நிலைக்கு  எமது மண்ணின்  ஆக்க இலக்கிய வாதிகள் தள்ளப்பட்டுள்ளனர்.  சந்தர்ப்பம் , சூழ்நிலை அடிப்படையில்  இது தொடர்பான விழிப்புணர்வு போதாத நிலையிலுள்ளது எனத் தெரிவித்தார்  யாழ்ப்பாணம் தேசியக்  கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளர் கலாநிதி பா. தனபாலன்.

கந்தர்மடம் அ .அஜந்தன் எழுதிய  ‘ மனமெனும் கூடு ‘  கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா கடந்த  சனிக்கிழமை (23-04-2016) யாழ்.கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்றக்  கலைத் தூது மண்டபத்தில் யாழ்.தேசிய கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளர் கலாநிதி பா. தனபாலன் தலைமையில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

எழுத்தாளர்கள் காலத்தின் கண்ணாடிகளாக விளங்குகின்றனர். எம்மவர்களால் வெளியிடப்படும் ஒவ்வொரு படைப்பு இலக்கியங்களும் எங்கள் வரலாறு. ஆவணப் படுத்தப்பட்டு அடுத்த சந்ததியினரிடம் கையளிக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள் . ஈழத் தமிழினம் தன்னுடைய ஆவணத்தையும் தன்னுடைய பாரம்பரியத்தையும் தொலைக்கின்ற அல்லது மறக்கின்ற வகையில் தற்காலத்தில் செயற்படுவது வேதனைக்குரியது.

பல்வேறு தாக்கங்கள் , சூழ்நிலைப் பிரச்சினைகள், பொருளாதாரப் பிரச்சினைகள் என்பவற்றையும்  தாண்டி தொண்டு நிறுவனமொன்றில் பணியாற்றி வரும் கந்தர்மடம் அஜந்தன் தான் அன்றாடம் காண்கின்ற மக்களின் பிரச்சனைகளை வெளியுலகிற்குக் கொண்டு வரவேண்டும் எனும் நோக்குடன் ‘மனமெனும்  கூடு’  கவிதைத் தொகுப்பை தனது முதல் கவிதைத் தொகுப்பாக வெளிக் கொண்டு வந்திருக்கிறார். அவரது கவிதைகளில்  யுத்தம் எமக்கு ஏற்படுத்திய வலிகள் மறைமுகமாகவும் நேரடியாகவும் பேசுபொருள்களாக  உள்ளன .

இலக்கியக் கவிதைகளில்  வேறு இரசனைகளுக்கு அப்பாற்பட்டு எமது நாட்டில் நிலவிய நீண்ட கால யுத்தத்திற்குப் பின்னர் அந்த யுத்தத்தின் விளைவுகள்  எவ்வாறு இருக்கும் ? எனும் மிகப் பெரிய ஆய்வினை  இலகுபடுத்தப்பட்ட முறையில் எடுத்துக் கூறும் வகையில் இந்தக் கவிதைத் தொகுப்பு  நூல் வெளிவந்துள்ளது. எமது பல்கலைக் கழகம் , எமது பேராசிரியர்கள் இன்று வரை இந்த 30 வருட கால யுத்தத்தின் விளைவுகளை கல்வி ,பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியாக எந்தப் புத்தி ஜீவிகளும் ஆய்வு செய்து வெளியிடாதவாறு அந்நிய மயமாதலின் சூழ்ச்சிகளுக்குள் அகப்பட்டு அமைதியாகவிருக்கும் நிலையில் ஒரு இளைஞன் முன்வந்து இவ்வாறான ஆக்க இலக்கியப் படைப்பை வெளியீடு செய்வது வரவேற்புக்குரியது . அவரது ஒவ்வொரு கவிதைகளும் மிகுந்த துணிவின் பிரதிபலிப்புக்கள். யுத்தத்தின் கொடுமையான தாக்கத்தை அனுபவித்த  மக்களின் வேதனைகள் , வலிகளைப் பிரதிபலிக்கும் படைப்புக்கள்.

சீனாவிலுள்ள ஒவ்வொரு தனி மகனும் சர்வதேச தரத்திற்கு ஏற்பப் பொருட்களை உற்பத்தி செய்து அனுப்பிக் கொண்டிருக்கின்றான். இதன் காரணமாக சீனா உலக நாடுகளில் பொருளாதார முன்னேற்றத்தில் உயர்ந்த இடத்திலிருக்கிறது.

தமிழினம் தலைநிமிர்வதற்கு மிகப் பெரிய ஆயுதங்கள் கல்வியும் , பொருளாதாரமும் , இலக்கியங்களுமே ஆகும். எங்களை சிங்களவர்களோ, இந்தியாவோ,அமெரிக்காவோ, ஐ.நா வோ அங்கீகரிக்கத் தேவையில்லை. எங்களை முதலில் நாங்களே அங்கீகரிக்க வேண்டும். எங்களை நாங்கள் உணர வேண்டும்  என்றார்.

Related posts: