எனக்கு கணக்கு கற்பித்துத் தரத் தேவையில்லை – இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா!

தான் அரசியலுக்கு வருவதற்கு முன்பு ஏழு வருடங்கள் வங்கியொன்றில் பணிபுரிந்திருப்பதால் அரசியலில் இப்போது பிரவேசித்திருக்கும் கத்துக்குட்டிகள் தனக்கு கணக்கு சொல்லித்தரத் தேவையில்லை என இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், பிணைமுறி மோசடி விவகாரம் சரியான முறையில் கையாளப்படாவிட்டால் அடுத்த 30 ஆண்டுகளில் இலங்கைக்கு ஒரு ட்ரில்லியன் ரூபாவரை நட்டம் ஏற்படுமென நான் தெரிவித்திருந்தேன்.
எனினும், ட்ரில்லியனுக்கும் மில்லியனுக்கும் வித்தியாசம் தெரியாத ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. நளின் பண்டார எனது கணிப்பு பிழையானது எனச் சுட்டிக்காட்டினார். நான் ஏற்கனவே கூறியபடி அரசியலுக்கு வருவதற்கு முன்பே வங்கியொன்றில் பொறுப்பான பதவியொன்றில் ஏழு வருடங்கள் இருந்திருக்கிறேன். அதற்கும் மேலாக இருபது வருடங்கள் அமைச்சராக இருந்திருக்கிறேன்.
எனவே, எனக்கு ட்ரில்லியனுக்கும் மில்லியனுக்குமுள்ள வித்தியாசம் நன்றாகத் தெரியும். அரசியலில் இன்னும் கத்துக்குட்டிகளாகவே இருக்கும் நளின் பண்டார போன்றவர்கள் எனக்குக் கணக்குப்பாடம் எடுக்கத் தேவையில்லை.
பிணைமுறி மோசடியாளர்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு அவர்கள் கொள்ளையிட்ட பணம் மீட்கப்படாவிட்டால் அடுத்த முப்பது ஆண்டுகளில் இலங்கைக்கு கிட்டத்தட்ட ஒரு ட்ரில்லியன் ரூபாவரை நட்டம் ஏற்படுமென மீண்டும் வலியுறுத்திக்கூற விரும்புகின்றேன். பிணைமுறி மோசடி விவகாரம் பற்றி விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்ததற்கு எனது பாராட்டுகளைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.
அவர் அவ்வாறு செய்திருக்காவிட்டால் இந்தப் பாரிய மோசடி வெளியுலகத்துக்குத் தெரியவராமலே மூடி மறைக்கப்பட்டிருக்கும் என்பது சர்வ நிச்சயம் என அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|