எந்தவொரு தேசிய பரீட்சையிலும் பாட விடயங்கள் குறைக்கப்படமாட்டாது – கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Monday, November 15th, 2021

இம்முறை தேசியப் பரீட்சைகளுக்கான வினாத்தாள் தயாரிப்பில் பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அலகுகளின் எண்ணிக்கையில் எவ்விதக் குறைப்பும் ஏற்படாது என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

வினாத்தாள் தயாரிப்பில் பாடப்பிரிவுகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என பரவி வரும் பரப்புரை குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே பேராசிரியர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுநோய் காரணமாக இந்த ஆண்டு பாடப் பிரிவுகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று சில அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி வகுப்புகளின் ஆசிரியர்கள் மாணவர்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

சிக்கலான பாடப் பிரிவுகள் குறைக்கப்படும் என்றும் சில ஆசிரியர்கள் இலகுவான பாடப் பிரிவுகள் நீக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

இந்த நிலை குறித்து இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

ஆனால் பரீட்சை எழுத போதிய கால அவகாசம் உள்ளதால் பாடப்பிரிவுகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை புலமைப்பரிசில் பரீட்சை ஜனவரி 22 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரி 7 ஆம் திகதியும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மே 23 ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: