எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் புகையிலை வரி நிச்சயம் அமுலாகும்!- அமைச்சர் ராஜித்த சேனாரத்ன

Thursday, September 8th, 2016

எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் புகையிலைக்கான வரி அறவீட்டு தீர்மானத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லையென சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன நேற்று தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து மூவரடங்கிய அமைச்சரவை உபகுழு இதுகுறித்த அறிக்கையை அடுத்தவாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட தீர்மானம் முன்னெடுக்கப்படுமெனவும் அமைச்சர் சேனாரத்ன கூறினார். “புகையிலை வரி அறவீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நிதி அமைச்சின் அதிகாரிகள் மட்டத்திலிருந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவர்கள் எமக்கு சுகாதார தரவுகள் குறித்து கற்பிக்க முயற்சிக்கின்றார்கள்.

புகையிலை நிறுவனங்களின் பிரதிநிதிகளைப் போல் செயற்படும் இந்த அதிகாரிகளிடமிருந்து எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் நாம் வரி அறவிடும் தீர்மானத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை” என்றும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன் போது புகையிலைக்கான வரி அறவிடுவது குறித்து செய்தியாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

புகையிலைக்கான வரி அறவீட்டை அமுல் செய்தால் பாரிய நஷ்டம் ஏற்படும் என்பதே நிதி அமைச்சினது நிலைப்பாடாகும். இது குறித்து நான் ஜனாதிபதியிடம் விளக்கினேன். அதற்கு அவர் நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை புகையிலை நிறுவனங்களை பலவீனமடையச் செய்து இல்லாது ஒழிப்பதே எமது குறிக்கோளாகுமே தவிர அதனை பலப்படுத்தி இலாபம் சம்பாதிப்பது அல்ல என்றும் என்னிடம் சுட்டிக்காட்டினார்.

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை திறப்பு விழாவின் போதும் நாம் புகையிலை வரி அறவீடு குறித்து விரிவாக ஆராய்ந்தோம். இச் சந்தர்ப்பத்தில் நிதி அமைச்சின் அதிகாரிகள் புகையிலை நிறுவனங்களின் பிரதிநிதிகளைப் போன்று எமக்கே சுகாதார தரவுகள் குறித்து பாடம் கற்பிக்க வந்தார்கள் என்றும் அமைச்சர் ராஜித்த தெரிவித்துள்ளார். “இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும் போதே அழுத்தங்கள் வருமென நாம் அறிந்திருந்தோம். ஆனால் எந்தவொரு அழுத்தத்துக்கும் அஞ்சி நாம் பின்வாங்கப் போவதில்லை” என்றும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

இச் சட்டத்தை நிறைவேற்றுவதில் நிதி அமைச்சர் தடையாக இருக்கின்றாரா? என கேள்வி எழுப்பப்பட்டதற்கு நிதி அமைச்சர் இல்லை, நிதி அமைச்சின் பல்வேறு மட்ட அதிகாரிகளே விமர்சனங்களை முன்வைத்திருப்பதாக அமைச்சர் ராஜித்த பதிலளித்தார்.

புகையிலைக்கான வரி அறவீடு நடைமுறைக்கு வருமாயின் புகையிலை பயிர்ச்செய்கையில் ஈடுபட்டிருக்கும் 3 ஆயிரம் பேர் தொழிலை இழக்க நேரிடுமென நிதி அமைச்சு கூறுகின்றது. இருப்பினும் எமது கணக்கெடுப்பின்படி இதில் எவ்வித உண்மையும் இல்லையென கண்டறியப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

col1d7b365fe3d72172105657_4543311_14072016_mff

Related posts: