ஊர்காவற்துறையில் கர்ப்பிணி பெண் படுகொலை: வாய்பேச முடியாத சிறுவன் சாட்சியம்!

Wednesday, January 25th, 2017

நேற்றைதினம் ஊர்காவற்துறையில் சில விசமிகளால் மேற்கொள்ளப்பட்ட இளம் குடும்பப் பெண்ணின் படுகொலை தொடர்பில் 12 வயதான சிறுவன் ஒருவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

நேற்றையதினம் ஊர்காவற்துறை – சுருவில் பகுதியில் 7 மாத கர்ப்பிணி பெண்ணான ஞானசேகரன் ஹம்சிகா மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவத்தினால் குறித்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இந்த படுகொலை சம்பவத்தை நேரில் பார்த்ததாகவும் சந்தேக நபர்களை அடையாளம் காட்ட முடியும் என 12 வயதான சிறுவன் ஒருவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

குறித்த சிறுவன் வாய் பேச முடியாதவர் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், சிறுவனின் தெரிவித்துள்ள தகவல்களுக்கு அமைவாகவும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நெடுந்தீவு பகுதியை சேர்ந்த படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் கடமையாற்றி வருகின்றார்.

இதன் காரணமாக வாடகைக்கு வீடு எடுத்து ஊர்காவல்துறையில் அவர்கள் தங்கி வந்துள்ளனர். வழமையினை போன்று இன்றைய தினமும் வேலைக்கு சென்ற கணவர் மனைவிக்கு தொலைபேசிமூலம் அழைப்பை ஏற்படுத்தியுள்ளார்.

எனினும், அழைப்புக்கு பதில் கிடைக்காததன் காரணமாக அயல்வர்களை தொடர்புகொண்டு மனைவி குறித்து விசாரித்துள்ளார் இதனையடுத்து, அயல் வீட்டார்கள் சென்று பார்த்து போது குறித்த பெண் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

குறித்த பெண் தலையின் பின்புறத்தில் தாக்கியும், கழுத்து பகுதியில் வெட்டியும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார். உடனடியாக அயல்வர்கள் பொலிஸாருக்கும் பெண்ணின் கணவருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து பொலிஸார் விசாரணைகளை துரிதகதியில் மேற்கொண்டனர். மேலும் குறித்த பகுதியில் இரும்பு சேகரிக்க வந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களே இந்த கொலையை செய்திருக்கலாம் என பொது மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.

இதனையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் ஊர்காவற்துறை – யாழ்ப்பாண வீதியில் மண்டைதீவு சந்தியில் வைத்து பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்தனர். இதன் போது சந்தேகநபர்களை அந்த பகுதியில் இருந்தவர்கள் தாக்குவதற்கு முற்பட்டனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. எனினும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் பாதுகாப்பு கருதி யாழ். பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் சுழிபுரம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகநபர்களை நாளை ஊர்கால்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, பெண்ணை படுகொலை செய்த பின்னர், தடயங்களை அழிக்கும் நோக்குடன் கொலையாளிகள் செயற்பட்டுள்ளனர். இரத்தகறைகளை கழுவியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

death_jaffna002

Related posts: