ஊரடங்கு அனுமதிப்பத்திர விநியோகம் தொடர்பில் புதிய நடை – அரசாங்கம்!

Wednesday, April 8th, 2020

நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்டு வரும் நிலையில், அத்தியாவசிய தேவைக்காக ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள பொலிஸ் நிலையங்களில் மக்கள் ஒன்று கூடும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு அனுமதிப்பத்திர விநியோகம் தொடர்பில் புதிய நடை முறைகளை அரசாங்கம் நடை முறைப்படுத்த தீர்மானித்துள்ளது.

இது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு ஆலோசனை வழங்கிய நிலையில், இதற்கான சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது..

அதன்படி இனிவரும் நாட்களில் ஊரடங்கு அனுமதிப்பத்திரமானது நான்கு செயன் முறைகள் ஊடாக நடை முறைப்படுத்தப்படுவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்தது.

பொலிஸ் தலைமையகம், மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகங்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் ஊடாக, நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இந்த ஊரடங்கு அனுமதிப்பத்திரம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில், 50 அல்லது அதற்கு மேலதிகமான சேவையாளர்கள் உள்ள நிறுவனங்கள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் ஊடாக மட்டுமே ஊரடங்கு அனுமதிப்பத்திரம் விநியோகிக்க முடியும்.

இம்மாகாணத்தின் கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள 50 அல்லது அதற்கு மேலதிகமான சேவையாளர்கள் உள்ள நிறுவனங்கள் தொடர்பில் ஊரடங்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் பொறுப்பு மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.

மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் உள்ள 50 அல்லது அதற்கு மேலதிகமான சேவையாளர்கள் உள்ள நிறுவனங்கள் தொடர்பில் ஊரடங்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் பொறுப்பு அவ்வந்த மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒவ்வொரு பொலிஸ் வலயத்திலும் 10 முதல் 50 வரையிலான சேவையாளர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு ஊரடங்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் பொறுப்பு அவ்வந்த வலயங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அல்லது பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் 10 இற்கு குறைவான சேவையாளர்களைக் கொண்டுள்ள நிறுவனங்கள், தத்தமது நிறுவனம் உள்ள பொலிஸ் அதிகாரப் பகுதிக்கு பொறுப்பான பொலிஸ் நிலையத்தில் ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் அவசரமான மனிதாபிமான தேவைகளுக்காக வழங்கப்படும் ஊரடங்கு அனுமதிப்பத்திரமும் பொலிஸ் நிலையங்கள் ஊடாக வழங்கப்படவுள்ளன.

நியாயமான காரணங்களுக்காக ஊரடங்கு அனுமதிப்பத்திர கோரிக்கைகளை முன்வைக்குமாறும், சிந்தித்து எந்த இடத்தில் அந்த அனுமதியைப் பெற விண்ணப்பிக்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்குமாறும் பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், அதிகார சபைகள், உள்ளிட்ட நிறுவனங்கள் தமது சேவை அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும் எனவும், அதனை துஷ்பிரயோகம் செய்தால் அவர்களும் கைதுசெய்யப்படுவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே, அத்தியாவசிய தேவைக்காக வழங்கப்பட்டுள்ள ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என பாதுகாப்பு படைகளின் பதில் தலைமை அதிகாரி, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts: