உலகுக்கு நாம் எடுத்துக் காட்டிய நல்லிணக்கம் முழு இஸ்லாமிய உலகிற்கும் ஒரு சிறந்த முன் உதாரணமாகும் – ரமழான் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி கோட்டாபய தெரிவிப்பு!

Friday, May 14th, 2021

சமூகங்களுக்கு இடையில் அமைதியையும் சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்பி உலகுக்கு நாம் எடுத்துக் காட்டிய நல்லிணக்கம் முழு இஸ்லாமிய உலகிற்கும் ஒரு சிறந்த முன் உதாரணமாகும் என சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் தனது ரமழான் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ரமழான் நோன்பு பெருநாள் குறித்து விடுத்துள்ள வாழ்ச்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் ரமழான் நோன்பு காலத்தை நிறைவுசெய்து இறைவன் அல்லாஹ் தங்களின் விருப்பங்களை ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கையுடன் ஈதுல்-பித்ர் நோன்புப் பெருநாள் பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

இந்த ஈதுல் பித்ர் நன்னாளில் அவர்களின் அந்த அனைத்து நல்லெண்ணங்களும் ஈடேற வேண்டும் என நான் வாழ்த்துகிறேன். எந்தவிதமான அந்தஸ்த்து வேறுபாடுகளின்றி அனைவரும் ஒன்றாக ரமழான் மாதத்தில் ஒரு வளமான வாழ்க்கைக்காக அல்லாஹ்வின் அருளைப் பெற்றுக்கொள்வது ஒரு சமய மரபு என்ற போதிலும், அதன் சமூக பெறுமானம் போற்றத்தக்கதாகும்.

தமது வாழ்க்கையை பரிசுத்தப்படுத்திக் கொள்வதற்கும் சுய கட்டுப்பாட்டை வளர்த்துக் கொள்வதற்குமான ஒரு சிறந்த சந்தர்ப்பமாக முஸ்லிம்கள் ரமழானை கருதுகின்றனர்.

ரமழான் காலத்தில் வளர்ந்தவர்கள் செய்யும் நற்செயல்களின் பால் சிறுவர்களும் ஈர்க்கப்படுகிறார்கள். இன்று உலகம் எதிர்கொள்ளும் கொவிட் பேரழிவிலிருந்து உலக மக்களை பாதுகாக்க வேண்டும் என்பது இஸ்லாமியர்களின் பிரார்த்தனைகளில் ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த நோய்த்தொற்று நிலைமைகளில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமான வாழ்க்கையை கட்டியெழுப்ப வேண்டும் என்பதே அனைத்து மக்களினதும் பிரார்த்தனையாகும். இதற்காக ரமழான் காலத்தை பயன்படுத்திக் கொள்வது பயனுடையதாக இருக்கும்.

புனித அல் குர்ஆனின் போதனைகளை பின்பற்றும் உண்மையான முஸ்லிம்கள் இந்த கூட்டு அர்ப்பணிப்பையும் திடஉறுதியையும் மேலும் பலப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என்று நான் நம்புகிறேன் என்றும் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: