உலகளாவிய மாற்றங்களுடன் இலங்கை வேகமாக தகவமைதல் வேண்டும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்து!

Wednesday, February 17th, 2021

உலகளாவிய மாற்றங்களுடன் இலங்கையும் வேகமாக தகவமைதல் வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார்.

அத்துதுடன் நாங்கள் பின்தங்கியிருக்க முடியாது. விரைவாக மாறிவரும் சமூக நிலைமைகளுக்கு மத்தியிலும் கூட மாணவர்களுக்கு ஏற்ற கல்வி வழங்கப்பட வேண்டும். இது பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களால் கவனிக்கப்பட வேண்டிய மற்றும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய ஒரு பகுதி என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 2020 பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் – ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் குறுகிய காலத்தில் முழு தகுதி வாய்ந்த பல்கலைக்கழகமாக மாறியிருப்பது குறித்து ஜனாதிபதி பாராட்டு தெரிவித்தார். மேலும் மருத்துவம், பொறியியல் மற்றும் சட்டம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குகின்றவர்களை உருவாக்கியதன் காரணமாகவே பல்கலைக்கழகம் விரிவடைய காரணமாக அமைந்தது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரச பல்கலைக்கழங்கள் மற்றும் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற தனியார் துறைக்கு அதிக வாய்ப்புகள் இருக்க வேண்டும்.

பட்டதாரிகளுக்கு புதிய தொழில்நுட்பத்தைப் பற்றி குறிப்பிட்டளவு அறிவு இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு கணினியை இயக்குவதற்கான விடய அறிவு இருக்க வேண்டும் என்பது வெற்றிகரமான எதிர்காலத்தை உருவாக்க உதவும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் கல்வித் துறைகள் எதுவானாலும் அனைத்து துறைகளுக்கும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி அறிவை அறிமுகப்படுத்துமாறு ஜனாதிபதி அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களிடமும் கேட்டுக்கொண்டார்.

பல்கலைக்கழக கல்விக்கு தெரிவு செய்யப்படும் அனைத்து மாணவர்களும் திறமைவாய்ந்தவர்கள். அவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் நுழையும்போது அவர்கள் விரும்பும் ஒரு பாடத்தைத் தேர்ந்தெடுப்பதில் குறைபாடு இருந்தால், அது கல்வி முறைமையின் குறைபாடேயன்றி மாணவர்களின் குறைபாடு அல்ல என தெரிவித்திருந்த ஜனாதிபதி அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக மட்டத்தை அடைந்தவுடன் அவர்களிடமுள்ள திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான வசதிகளும் வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அத்துடன் அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயலற்பட்டால், உலகம் வேகமாக மாறினாலும், நமது பல்கலைக்கழகங்களை உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்த நிறுவனங்களாக மாற்ற முடியும் என்றும், இதன் மூலம் இளைஞர் யுவதிகளுக்கு எதிர்கால முன்னேற்றத்தை வழங்கி நாட்டின் பொருளாதாரத்தையும் வலுப்படுத்த முடியும் என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 000

Related posts: