உயிர்நீத்தவர்களுக்கு ஓமந்தை நினைவுத்தூபி அமைக்கும் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு விரைவில் அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, May 25th, 2016

இலங்கையில் யுத்தம் காரணமாக உயிர்நீத்தவர்களுக்கு ஓமந்தையில் நினைவுத்தூபி அமைக்கும் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கை நாடாளுமன்றில் சிலதினங்களில் அங்கீகரிக்கப்படுமென எதிர்பார்க்கப் படுகின்றது.

இலங்கையில் யுத்தத்தின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள், இறுதியுத்தத்தின்போது பொதுமக்கள் மற்றும் மோதலில் ஈடுபட்ட இருதரப்பில் இருந்தும் ஏராளமானவர்களும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுத் தூபி அமைத்து, அதனை வருடாந்தம் கௌரவிக்கும் நிகழ்வொன்றையும் நடத்த வேண்டுமென்று ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனி நபர் பிரேரணையொன்றை நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார்.

யுத்தம் காரணமாக உயிரிழந்த சகல மக்களையும்  கௌரவிக்கும் வகையில் ஓமந்தையில் நினைவுத்தூபி ஒன்றை அமைப்பதற்கும், வருடாந்தம் அதற்கான ஞாபகார்த்த தினம் ஒன்றைப் பிரகடனப்படுத்துவதற்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கை தற்போது நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளின் போது அதற்கான அனுமதி கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts: