இலண்டனிலிருந்து வந்தவரை 15 மணி நேரங்களுக்கும் மேலாக நீர் வழங்காது தாக்கி சித்திரவதை செய்த தெல்லிப்பளை பொலிஸார்!

Saturday, September 24th, 2016

இலண்டனில் இருந்த வந்த நபர் ஒருவரை 15 மணித்தியாலங்களுக்கு மேலாக அருந்த நீர் வழங்காது , உணவு வழங்காது , மலசல கூடம் செல்ல அனுமதிக்காது பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து தெல்லிப்பளை பொலிசார் தாக்கி , சித்திரவதை செய்ததாக, மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் பாதிக்கப்பட்ட நபர் வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.

மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில், தெல்லிப்பளை பொலிசார் திருட்டு சந்தேகத்தில் கைது செய்தோம் என இரு நபர்களை முற்படுத்தினார்கள். அதன் போது அவ்வாறு நீதிமன்றில் முற்படுத்திய நபர் ஒருவர்  தம் மீது பொலிசார் பொய்க் குற்றச்சாட்டு சுமத்துகின்றார்கள் தன்னை பொலிசார் அடித்து சித்திரவதை புரிந்தார்கள் என நீதிவானிடம் முறையிட்டார்.

அது தொடர்பில் குறித்த நபர் நீதிவானிடம் முறையிடுகையில் ,

லண்டனில் இருந்து வந்துள்ளேன். நேற்று வியாழக்கிழமை, இரவு அளவெட்டியில் உள்ள நண்பனை சந்திப்பதற்காக எனது தம்பியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றேன். அவ்வேளை அம்பனை சந்திக்கு அருகில் நின்ற தெல்லிப்பளை பொலிசார் எம்மை மறித்து மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் அனுமதி பத்திரம், காப்புறுதி பத்திரம், வரி பத்திரம் ஆகியவறை கேட்டனர்.

அதன் போது தம்பி அவற்றை எடுத்து வரவில்லை மறந்து போய் வீட்டில் விட்டு விட்டு வந்து இருந்தார். அவ்வேளை நான் நிற்கிறேன் தம்பி சென்று அவற்றை எடுத்து வரட்டும் என பொலிசாரிடம் கூறினேன்.  அதற்கு பொலிசார் மறுப்பு தெரிவித்தனர்.

அவ்வேளை தம்பி தனது நண்பர் ஒருவருக்கு தொலை பேசி மூலம் அறிவித்து வீட்டில் இருக்கும் தனது பேர்ஸ்ஸ எடுத்து வருமாறு கூறினார். அந்த நண்பர் அவற்றை எடுத்து வருவதற்கு முன்னர். பொலிசார் எம்மை தூசணத்தால் ஏசினார்கள். உடனே நான் தூசணத்தால் நீங்க பேச முடியாது எதற்காக எங்களை பேசுறீங்க என கேட்டேன்.

அதற்கு பொலிசார் அந்த இடத்தில் வைத்து எம் மீது தாக்குதல் மேற்கொண்டனர். அத்துடன் எம்மை கைது செய்து தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திற்கு இரவு 8.25 மணிக்கு கொண்டு சென்றனர்.

பொலிஸ் நிலையத்த்தில் எனக்கு கைவிலங்கு பூட்டி முழங்காலில் என்னை உட்கார வைத்து கை கால்களால் என்னை கடுமையாக தாக்கினார்கள். அதில் ஒரு கட்டத்தில் எனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு வலியால் துடித்தேன். என்னை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு கதறி அழுதேன்.

அதனை அடுத்து என்னை தெல்லிப்பளை வைத்திய சாலைக்கு அழைத்து சென்றனர். அவ்வேளை வைத்தியர் தாக்கினார்களா  என கேட்டால் இல்லை என கூற வேண்டும் என மிரட்டியே என்னை அழைத்து சென்றனர்.அங்கு வைத்தியர் என்னை பரிசோதித்து விட்டு உடலில் உள்ள காயங்களை கண்டு என்னுடன் தனியாக பேச வேண்டும் என கோரினார்.  அதற்கு பொலிசார் மறுப்பு தெரிவித்து, இவரின் உடலில் காயங்கள் இல்லை என மருத்துவ அறிக்கை தாறுமாறு வைத்தியரிடம் கோரினார்கள்.

அவ்வாறு மருத்துவ அறிக்கை தர முடியாது என வைத்தியர் மறுப்பு தெரிவித்தார். அதனை அடுத்து தாம் யாழ்.போதனா வைத்திய சாலையில் என்னை அனுமதிக்க போறோம் என கூறி பொலிசார் தெல்லிப்பளை வைத்திய சாலையில் இருந்து என்னை அழைத்து சென்றனர்.வைத்திய சாலையில் இருந்து அழைத்து வந்து தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் அறை ஒன்றினுள் என்னை தடுத்து வைத்தனர். அதன் போது அருந்துவதற்கு நீர் கேட்டேன் தர மறுத்து விட்டார்கள்.

பின்னர் இரவு மீண்டும் எனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. அதன் போது நான் வீட்டில் இருந்து மருந்து எடுக்கணும் வீட்டாருக்கு அறிவியுங்கள் என பொலிசாரிடம் கோரினேன். அதற்கு மறுப்பு தெரிவித்து குளிசை ஒன்று தந்து இதனை போடுமாறு மிரட்டினர்.நான் அந்த குளிசையை போட்டதும் எனக்கு சத்தி வர தொடங்கியது. சத்தி எடுக்க வெளியில் அழைத்து செல்லுமாறு பொலிசாரிடம் கோரிய போது அதற்கும் மறுப்பு தெரிவித்தனர். அதனால் அந்த அறையினுள்ளே சத்தி எடுத்தேன்.

இரவு முழுவதும் அறை முழுவது சத்தி எடுத்தேன். நான் எடுத்த சத்திக்கு மத்தியிலையே படுத்து தூங்கினேன். பின்னர் மதியம் என்னையும் தம்பியையும் அழைத்து , இங்கு நடந்த எது பற்றியும் நீதிமன்றில் எதுவும் கூற கூடாது , அவ்வாறு கூறாது விட்டால் இன்றைய தினமே உங்களை பிணையில் செல்ல அனுமதிப்போம். இல்லை எனில் சிறைக்கு அனுப்புவோம் என மிரட்டினார்கள்.

பின்னர் சிங்களத்தில் எழுதிய கடிதம் ஒன்றில் என்னை கையொப்பம் இட சொன்னார்கள். நான் மறுத்த போது என்னை மிரட்டினார்கள். அதனால் நான் “என்னை பொலிசார் சித்திரவதைக்கு உட்படுத்தினார்கள்”.  என ஆங்கிலத்தில் தொடுத்து எழுதினேன். அதனை பொலிசார் எனது கையொப்பம் என நினைத்து எம்மை நீதிமன்றுக்கு அழைத்து வந்துள்ளனர்.அழைத்து வரும் போதும் ,பொலிஸ் நிலையத்தில் நடந்த சம்பவம் எது பற்றியும் நீதிமன்றில் எதுவும் கூற கூடாது என மிரட்டினார்கள்.

தாக்குதல் நடாத்திய இரண்டு பொலிஸாரும் இவர்கள் தான் தன் மீது  தாக்குதல் மேற்கொண்டவர்களில் தமிழ் பொலிசாரான நக்கீரன் என்பவரும், 88141 எனும் பொலிஸ் இலக்கம் உடைய பொலிசாருமே  என நீதிவானிடம் முறையிட்டார்.

தனக்கு பொலிசார் 15 மணித்தியாலங்களாக அருந்த நீர் தராதமையால் , தான் மிகுத்த தாகத்தில் உள்ளதாகவும் தனக்கு தண்ணீர் தருமாறும் பாதிக்கப்பட்ட நபர் கண்ணீருடன் நீதிவானிடம் கோரிக்கை விடுத்தார்.

அதனை அடுத்து அந்த நபருக்கு நீர் வழங்கபட்ட போது திறந்த மன்றில் பெருமளவான நீரினை அருந்திக் கொண்டார்.பொலிசார் தாக்குதல் மேற்கொண்டதில் குறித்த நபரின் கண்கள் சிவந்து வீக்கத்துடன் காணப்பட்டது. அத்துடன் டொச்லைட்டால் அடித்து பிடரியில் வீக்கம் காணப்பட்டது. அதேவளை தாக்குதலுக்கு இலக்கான நபரால் நிற்க முடியாதது கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தார்.

தாக்குதலுக்கு இலக்கான நபரை தெல்லிப்பளை வைத்திய சாலைக்கு சென்று சிக்கிச்சை பெறுமாறும் , குறித்த நபரின் மருத்துவ பரிசோதனை அறிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிவான் பணித்தார்.

குறித்த இரு நபர்களையும் தெல்லிப்பளை பொலிசார் திருட்டு சந்தேக நபர்கள் என்றே நீதிமன்றில் முற்படுத்தினர். தெல்லிப்பளை பொலிஸ் நிலைய பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து உள்ளதாகவும், அந்நிலையில் நேற்றைய தினம் இவர்கள் இருவரும் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியமையால் இவர்களை திருட்டு சந்தேகத்தில் கைது செய்து இருந்தோம் என தெரிவித்து இருந்தனர்.

அதனை அடுத்து நீதிவான் இவர்கள் இருவரையும் பார்க்கும் போது திருட்டு சந்தேக நபர்கள் எனும் சந்தேகம் ஏற்படாததால், இவர்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கின்றேன் என நீதிவான் கட்டளை பிறப்பித்தார்.  இந்த சம்பவம் தொடர்பில், உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபருக்கு நீதிவான் உத்தரவு இட்டார்.

4809-1-73304866ae8b1c95da44874e43ac1e32

Related posts: