இலங்கை – இந்திய மீனவர்களது பிரச்சினைக்கு நீண்ட கால தீர்வு – ‘லைசென்ஸ்’ முறை ஒன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டுவருவதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Thursday, February 23rd, 2023

இலங்கை, இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு நீண்டகால தீர்வை வழங்கும் வகையில் உரிய கவனம் செலுத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்;

அத்துடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், எமது மீனவர்களையும் வளங்களையும் பாதுகாப்பதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தொடரும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக பல யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்திய மீனவர்களுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டு அவர்கள் எவ்வளவு தூரம் வர முடியும் என்பதை அவதானிப்பது அவசியம். அத்துமீறிய மீனவர்களின் லைசென்ஸ் மூலம் பெறப்படும் பணத்தை எமது மீனவர்களுக்கு பகிர்ந்தளிப்பதும் ஒரு யோசனையாக முன் வைக்கப்பட்டுள்ளது.

எனினும் எமது மீனவர்கள் அதனை ஏற்றுக் கொள்வார்களா? என்பதும் கேள்வியாக உள்ளதென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் இரண்டு கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி முன்வைத்த கருத்துக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,

இலங்கையின் கடற்பகுதிக்குள் தினமும் 2,000 முதல் 3,000 இந்திய மீன்பிடிப்படகுகள் வருகின்றன. அவற்றை முழுமையாக தடுக்கக்கூடிய நிலை கிடையாதென எமது கடற் படையினர் தெரிவித்து வருகின்றனர்.

இதனைக் கவனத்தில் கொண்டே ”லைசென்ஸ் ”முறை மூலம் அந்தப்படகுகளின் வருகைகள் கட்டுப்படுத்தப்படவுள்ளன.

இந்த ”லைசென்ஸ் ” மூலம் கிடைக்கும் பணத்தை எமது மீனவர்களுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு வருகிறது.

எவ்வாறெனினும், இழுவை மடி வலை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் அனுமதி வழங்கப் போவதில்லை.

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கைக்கு அண்மையில் வருகை தந்த போது, நாம் இதனைப்பற்றிப் பேசினோம். அதேபோன்று வெளிவிவகார அமைச்சிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் அதிகாரிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.

வடக்கிலுள்ள மீனவர்களை பாதுகாக்க வேண்டும் என்பதே எமது முதலாவது பிரதான நோக்கம். இரண்டாவதாக எமது மீன் வளங்களை எவ்வித பாதிப்பும் இல்லாமல் பாதுகாக்க வேண்டும். மூன்றாவதாக இதற்காக ஒரு நீண்டகால தீர்வு அவசியம். இவற்றை எவ்வாறு மேற்கொள்ள முடியும் என்பது தொடர்பிலேயே தற்போது பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.

இதில் ஒரு தீர்வாக இந்திய மீனவர்களுக்கு ”லைசென்ஸ் ” ஒன்று வழங்க வேண்டுமென அவர்கள் கூறுகின்றனர்.

அப்படி ”லைசென்ஸ் ” வழங்குவதென்றால் அவர்கள் எமது பகுதிக்குள் எவ்வளவு தூரத்திற்கு வரலாம். அந்த லைசென்ஸுக்கு பெற்றுக் கொள்ளும் பணத்தை எமது மீனவர்களுக்கு பிரித்துக் கொடுக்கலாமா? அதை எமது மீனவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்பது பற்றி நாம் கலந்துரையாடி வருகின்றோம்.

எமது மீனவர்களின் தேவைகளுக்குத்தான் முதலிடம் என்பதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அதேநேரம் இலங்கை இந்தியாவுக்கிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்தவும் முடியாது. அதனால்தான், இரு நாடுகளுக்கிடையில் சாத்தியமான கலந்துரையாடல் இடம்பெற்று ஒப்பந்தமொன்றுக்கு வரமுடியுமானால் ”லைசென்ஸ் ”வழங்கி இந்திய கடற்படை மூலம் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த முடியும்.

அடுத்ததாக ஒரு தரப்புக்கு ”லைசென்ஸ் ” கொடுத்தால் ”லைசென்ஸ் ” இல்லாதவர்கள் வருவதற்கு ”லைசென்ஸ் ” உள்ளவர்கள் விடமாட்டார்கள். இதன்மூலம் அவர்களை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.

மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் மேற்கொள்ளப்படும் பேச்சு வார்த்தைகளுக்கு வடக்கு மக்களின் பிரதிநிதிகளையும் அழைப்போம். வடக்கிலுள்ள தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துவோமென்றும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

பைஸர் தடுப்பூசியினை தவிர ஏனைய அனைத்து தடுப்பூசிகளும் கிடைக்கப்பெற்றுள்ளன – இராஜாங்க அமைச்ச்ர் சன்ன ஜ...
ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்கும் நியமங்களை மாற்றியமைக்க அரசாங்கம் தயார் – அமைச்சர் சுசில் பிரேமஜயந்...
ஜனநாயக விரோத அரசியலையும், வன்முறையையும் எதிர்ப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!