இலங்கை அணியினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பிரதான சந்தேகநபர் மரணம்!

Monday, October 10th, 2016

 

2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது பாகிஸ்தான், லாகூர் நகரில் வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கொலை செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் முன்னெடுக்கப்பட்ட விஷேட சுற்றி வளைப்பு நடவடிக்கையொன்றின் போதே அவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆப்கானிஸ்தானின் பக்ரிகா மாநிலத்தில் ஆப்கான் மற்றும் நேடோ இராணுவத்தினர் இணைந்து இந்த விஷேட சுற்றி வளைப்பை மேற்கொண்டிருந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்திய சந்தேகநபர் க்வாரி அஜ்மால் என அடையாளம் காணப்பட்டிருந்தார். நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பு நடவடிக்கைகளின் போது, மேலும் மூன்று பயங்கரவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

க்வாரி அஜ்மால் பஞ்ஜாக் நகரில் வாழ்ந்து வந்துள்ளதாகவும், அவர் லஷ்கரி ஜான்க் வீ பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களை ஏற்றி சென்ற பஸ் மீது லாகூர் நகரில் வைத்து 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதி துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டிருந்தது. லாகூர் கடாபி மைதானத்திற்கு அருகிலேயே இந்த பயங்கரவாத தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, சமிந்த வாஸ், திலான் சமரவீர, அஜந்த மென்டீஸ், சுரங்க லக்மால் மற்றும் தரங்க பரணவிதான ஆகியோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

lahore_01

Related posts: