இலங்கையின் சுற்றுலா வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு ஈரான் அர்பணிப்புடன் செயற்படும் – ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியிடம் உறுதியளிப்பு!

Wednesday, February 21st, 2024

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தந்திருக்கும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் – அப்துல்லாஹியன் (Hossein Amir-Abdollahian) நேற்று (20) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, காஸா எல்லைப் பகுதிகளில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்தி சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஈரான் வெளிவிவகார அமைச்சரிடம் வலியுறுத்தினார். 

இதேநேரம் குறித்த சமாதான ஒப்பந்தம் ஒருதலைபட்சமாக இருக்க கூடாதெனவும் இரு தரப்பும் ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் ஏற்படுத்திகொள்ளப்பட வேண்டும் என்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். 

மேலும், இஸ்ரேல் அரசாங்கத்தின் பாதுகாகப்பை உறுதிப்படுத்தி, ஐந்து வருடங்களுக்குள் பாலஸ்தீன அரசாங்கத்தை அமைக்க வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இந்து சமுத்திரத்திற்குள் பெர்சிய வளைகுடா நாடுகளுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வலயத்தின் கப்பல் போக்குவரத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு இலங்கை அர்பணிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதன்போது இருநாடுகளுக்கும் இடையிலான கலாசார தொடர்புகளை பலப்படுத்திக்கொள்வதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹூசைன் அமீர் – அப்துல்லாஹியன், இலங்கையின் சுற்றுலா வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக ஈரான் அர்பணிப்புடன் செயற்படுமெனவும் உறுதியளித்துள்ளார். 

இதேவேளை ஈரான் – இலங்கை பொருளாதார ஒத்துழைப்புகளின் புதிய அத்தியாயத்தை திறக்கும் வகையிலான செயற்பாடுகளை இலங்கை முன்னெடுத்து வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தள்ளது.

000

Related posts: