இராணுவத்தினர் மீது கைவைக்க அனுமதியேன்: ஜனாதிபதி தெரிவிப்பு

Monday, September 4th, 2017

நாட்டின் இராணுவத்தினர் மீது கைவைக்க எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொரளை கம்ப்பெல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், மீள்கட்டுமானம், புனர்வாழ்வு ஆகியவற்றுக்கான சூழலொன்றை உருவாக்குவதற்கு, மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கம் தவறியமை காரணமாக, போர்க்குற்ற விசாரணைகள், பொருளாதாரத் தடைகள், இலங்கை மீதான அச்சுறுத்தும் வகையிலான பூகோள நாடுகளின் செயற்பாடுகள் ஆகியன ஏற்பட்டன எனவும் தெரிவித்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த கட்சியின் ஆதரவாளர்கள், கம்ப்பெல் மைதானத்தை நிறைத்திருக்க, கட்சியின் தலைவராகவும் நாட்டின் தலைவராகவும், இரண்டு வெவ்வேறு தொப்பிகளை அணிந்துகொண்டு, ஜனாதிபதி அங்கு உரையாற்றினார்.

வழக்கத்தை விட முன்பதாகவே, ஜனாதிபதித் தேர்தல் ஒன்றுக்குச் செல்ல வேண்டாமென முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு, 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், எழுத்துமூலமாகத் தெரிவித்ததாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதற்காக 6 அம்சக் காரணங்களையும் வெளிப்படுத்தியதாகக் குறிப்பிட்டார்.

குறிப்பாக, நல்லிணக்க விடயத்திலும் சீர்திருத்த விடயத்திலும், தங்களுடைய அரசாங்கம் தவறு விட்டிருந்தமையால், முன்கூட்டிய தேர்தல் வேண்டாமெனக் கூறியதாக அவர் குறிப்பிட்டார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் அனைவரும், முழுமையான ஆட்சிக் காலத்தைப் பூர்த்திசெய்த பின்னரே, தேர்தலை எதிர்கொள்ள வேண்டுமென்ற நிலைப்பாட்டில் காணப்பட்டனர் என்றும் குறிப்பிட்ட அவர், எனினும், பொருளாதார வீழ்ச்சியொன்று ஏற்படக் போகிறது எனவும், அதை எதிர்கொள்ள முடியாது என்றும் தெரிவித்து, முன்கூட்டிய தேர்தலுக்கு, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, அழைப்பு விடுத்தார் என்றும் குறிப்பிட்டார்.

இவ்வாறான நிலைமையில், பூகோள ரீதியாகவும் உள்ளூர் மட்டத்திலும், சாதகமற்ற நிலைமை காணப்பட்ட நிலையில், அரசாங்கத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்காவிட்டாலும், ஜனாதிபதியாக தான் தெரிவு செய்யப்பட்டிருக்காவிட்டாலும், என்ன நடந்திருக்கும் என்றும், அவர் கேள்வியெழுப்பினார்.

தற்போதைய அரசாங்கம் உருவாக்கிய சிறந்த சூழல் காரணமாக, சர்வதேச சமூகத்திடையே நற்பெயர் ஏற்பட்டதாகவும், ஜி.எஸ்.பி
பிளஸ் சலுகையைப் பெற முடிந்ததோடு, மீன்பிடி ஏற்றுமதிக்கு விதித்திருந்த தடையை, ஐரோப்பா விலக்கியது எனவும் குறிப்பிட்டதோடு, செப்டெம்பர் 2019ஆம் ஆண்டுவரை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் இலங்கைக்கு மேலதிக காலம் வழங்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

தேசிய அரசாங்கம் கடந்த 2 ஆண்டுகளில் நாட்டுக்கு ஏராளமானவற்றைச் செய்துள்ளது என்று தெரிவித்த அவர், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்குப் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியோ, தனித்துத் தேர்தலுக்குச் சென்றிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கேள்வியெழுப்பினார்.

“சில தவறுகள் இருக்கின்றன என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், ‘நல்லாட்சி அரசாங்கம்’ மீதான நியாயமற்ற விமர்சனங்களை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில், கடந்த 2 ஆண்டுகளில், ஏராளமானவற்றை நாங்கள் செய்துள்ளோம் என்பதுடன், பெரிய அனர்த்தத்திலிருந்து, நாட்டைப் பாதுகாத்துள்ளோம்” என்று குறிப்பிட்டார்.

புதிதாகவும் தடையின்றியும் கிடைத்துள்ள சுதந்திரத்தைச் சிலர் பயன்படுத்துவது, ஓரளவுக்கு விநோதமானது என்று குறிப்பிட்ட அவர், அவமானப்படுத்தல்; சேறுபூசுதல்; புரளி கிளப்புதல்; பேஸ்புக், இணையத்தளங்கள், ஏனைய இலத்திரனியல், பத்திரிகை ஊடகங்கள் மூலமாக பொய்யான தகவல்களை, தனக்கெதிராகவும் ‘நல்லாட்சி அரசாங்கத்துக்கு’ எதிராகவும் பரப்புதல் என, இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டார்.

Related posts: