இரத்மலானை விமான நிலைய பிரவேச வீதியை துரிதமாக அபிவிருத்தி செய்ய ஆலோசனை!

Thursday, January 27th, 2022

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டிவி சானக்க ஆகியோரின் கோரிக்கைக்கு அமைவாக இதுவரை அபிவிருத்தி செய்யப்படாத இரத்மலானை விமான நிலைய பிரவேச வீதியை துரிதமாக அபிவிருத்தி செய்யுமாறு நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் கொழும்பு பிரதான பொறியியல் அலுவலக அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாடு மீண்டும் திறக்கப்பட்டதன் மூலம், இலங்கை தற்போது அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இரத்மலானை விமான நிலையத்திற்கான பிரவேச வீதியின் அபிவிருத்திப் பணிகள் முதற்கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இரத்மலானை விமான நிலையத்திற்கு உள்நாட்டு விமான பயணங்களுக்காக வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கும் இந்த பாதையை பயன்படுத்தும் விமானப்படை வீரர்களும் பயன்படுத்தும் விதமாக இந்த பாதையின் அபிவிருத்தி பணிகள் 20 நாட்களுக்குள் பூர்த்தி செய்யப்படும் என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இரத்மலானை விமான நிலையத்திற்கு செல்லும் பாதையின் நீளம் 1.6 கி.மீற்றர்களாகும். இதற்காக 99.3 மில்லியன் செலவிடப்படவுள்ளது. 20.4 மில்லியன் ரூபாயில் நடைபாதை அமைப்பதற்கும், 24.8 மில்லியன் ரூபா வீதியின் இருபுறங்களிலும் வீதி விளக்குகள் அமைப்பதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிபபிடத்தக்கது..

Related posts: