இரட்டை மேம்பாலங்களின் முதலாம் கட்டப் பணிகள் திட்டமிடப்பட்ட காலத்திற்குள் நிறைவு செய்யப்படும் – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Monday, February 14th, 2022

இரட்டை மேம்பாலங்களின் மேற்பகுதியின் பணியை நிறைவு செய்வதற்குத் தேவையான கொன்கிரீட் கட்டமைப்புகளை எடுத்துச் செல்லும் பணி  நேற்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த இரட்டை மேம்பாலப் பணிகளை இவ்வருடம் ஜூன் மாதம் நிறைவு செய்வதற்காக 24 மணித்தியாலங்களும் உழைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கின் பிரகாரம், அபிவிருத்திக்கான பாதையில் நிலையான நாட்டை முன்னேற்றுவதற்கு நிலையான வீதி வசதிகளை மக்களுக்கு வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

எனவே, துரித அபிவிருத்தித் திட்டமாக கொழும்பு புறநகர் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் இரட்டை மேம்பாலத்தின் முதலாவது கட்டமான நீதிபதி அக்பர் மாவத்தை மற்றும் உத்தரானந்த மாவத்தையின் நிர்மாணப் பணிகள் திட்டமிட்ட திகதியில் நிறைவு செய்யப்படும் என ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

நீதிபதி அக்பர் மாவத்தையில் உள்ள மேம்பாலம் 207 மீட்டர் நீளமும் 8.4 மீட்டர் அகலமும் கொண்டது. உத்தரானந்த மாவத்தையில் உள்ள மேம்பாலம் 396 மீட்டர் நீளம் கொண்டது. இதன் அகலம் 10.4 மீட்டர்களாகும். இரண்டு மேம்பாலங்களையும் இணைக்கும் வகையில் அமைக்கப்படும் மேம்பாலத்தின் நீளம் 310 மீட்டர்களாகும். இதன் அகலம் 6.9 மீட்டர். இதற்கு 5270 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: