இந்திய இழுவைப் படகுகளின் எல்லைதாண்டும் அத்துமீறலை கண்டித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தீவக கடற்றொழில் அமைப்புகள் மகஜர்!

Thursday, February 27th, 2020

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்து தீவக கடற்றொழிலாளர் சங்கங்கள் சமாசங்கள் ஒன்றிணைந்து கண்டன பேரணி ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதில் இந்திய இழுவைப்படகுகளின் கண்மூடித்தனமான அத்துமீறல்களால் தமது கடற்றொழில் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதை கண்டித்து கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

குறித்த மகஜரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாபளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேலும்மயிலும் குகேந்திரன் மற்றும் கட்சியின் யாழ் தலைமை அலுவலக நிர்வாக செயலாளர் பூ. குணசிங்கம் ஆகியோரிடம் கையளித்திருந்தனர்.

குறித்த மகஜரில் –

இலங்கைத்தீவில் வடமாகாணத்திற்கும் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கும் அதிலும் விசேடமாக தீவுப்புகுதிகளுக்கும் தங்களால் ஆற்றப்பட்ட சேவை அளப்பெரியது.   எம்மில் தாங்கள் கொள்ளும் அக்கறை என்பது தாய் தந்தை ஸ்தானத்துக்கு மேலாக உயர்ந்தது. வட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளில் தங்களால் மேற்கொள்ளப்பட்ட பணிகளே இன்றும் எம்மத்தியில் நிலைத்து நிற்கின்றது. மீனவ சமூகத்தினராகிய நாம் தங்களின் சேவையுள்ளம் அறிந்து எங்களின் குறைகளை தாங்கள் ஒருவரினாலேயே கேட்டறிந்து தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இவ் வேண்டுதலை முன்வைக்கிறோம்.

நெடுந்தீவு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் மற்றும் நயினாதீவு கடற்றொழில் சங்கங்களின் ஏற்பாட்டின் கீழ் தீவகம் மற்றும் யாழ் மாவட்ட சங்கங்களும் கடற்றொழிலினை இன்று புறக்கணித்து  மீனவ பேரணியாக ஒன்று திரண்டு எம் இவ் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் தங்களை நாடி வந்துள்ளோம். எம் பிரதேசங்களை அண்டிய கடற் பகுதிகளில் இந்திய இழுவைப் படகுகளானது கூட்டம் கூட்டமாக எல்லை தாண்டி அடாவடித்தனமாகவும் பேரழிவை ஏற்படுத்தும் இழுவை மடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றமை எம் மீனவ சமூகம் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

எம் தாய்மொழியாம் தமிழ் மொழி பேசும் இந்தியத் தமிழ் உறவுகள் எம் சகோதரர்களாக இருந்த போதிலும் அவர்களால் எம் கடல் வளத்துக்கு ஏற்படுத்தும் பாதிப்புக்களோ எண்ணற்றவையாக உள்ளன. இவர்களால் மேற்கொள்ளப்படும் தொழில் முறைமையானது அதிவேக வலுவுடைய இயந்திரங்களையும் அதனோடு கூடிய மிக மோசமான கடல் வளத்தைப் பாதிப்படையச் செய்யும் தொழிலுபகரணங்களையும் கொண்ட இழுவைமடித் தொழிலால் எம் வாழ்வாதாரம் முற்றுமுழுதாகப் பாதிப்படைவதோடு எதிர்காலத்தில் கடல் வளத்தை நம்பி தொழில் முறைகளைப் பின்பற்ற முடியாமல் போகக்கூடிய அச்ச நிலைமையும் எம் மத்தியில் காணப்படுகின்றது. இந்திய உறவுகள் தங்கள் நாட்டின் எல்லையினைக் கடந்து எம் நாட்டின் கடல் எல்லைக்குள் புகுந்து எம் கடல் வளத்தை அளிக்கும் செயற்பாட்டை மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்திய உறவுகளின் இச் செயற்பாடுகள் அவர்கள் மேல் நாம் வைத்திருக்கும் அன்பையும் மதிப்பையும் காலம் கடந்தளவில் இழக்கச் செய்துவிடும் என்ற நிலை தோன்றுவதற்கு ஏதுவாக உள்ளது. இவ் இழுவைப்படகுகளின் அடாத்தான செயற்பாடானது ஒவ்வொரு கிழமையும் திங்கள் புதன் சனி ஆகிய தினங்களில் மாலை 06 மணி தொடக்கம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக எமது பிரதேசத்தில் கரையிலிருந்து 200 மீற்றர் தூரத்திற்குள் இழுவைப்படகுகள் வந்து செல்கின்றன.

இவ் இழுவைப்படகு மீன்பிடித்தலானது ஒரு அழிவு தரும் மீன்பிடித்தல் முறையாகும்.  இழுவைப்படகுகள் பாரபட்சமின்றி அதன் பாதையிலுள்ள எல்லாக் கடல் சார் வளங்கள் யாவற்றையும் துடைத்தெறித்துக் கொண்டு செல்கின்றன. தொடர்ந்து நடைபெற்று வரும் இம் மோசமான நடவடிக்கையினால் எமது கடல் வளங்கள் முற்றிலுமாக அழிவடைந்து அருகிப்போய்விட்டன. இவை முற்றிலுமாக அருகிப் போய்விட்ட இந் நிலையில் எமது மீனவர்களின் வருமானமும் அற்றுப்போன துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. இந் நிலைமையானது கடலையே நம்பி வாழும் எமது குடும்ப ஜீவனோபாயத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றது. ஒருவேளை உணவுக்காக அல்லல் படும் குடும்பங்கள் கூட எம்மிடையே வாழ்ந்து வருகின்றனர். இந் நிலமையானது எமது பிள்ளைகளில் கூட தாக்கத்தை  ஏற்படுத்தி அவர்களும் கூலி வேலையை நாடிச் செல்லும் துர்ப்பாக்கிய நிலைமையை ஏற்படுத்தி விடுகின்றது.

மேலும் இவ் இழுவைப்படகுகள் எமது வளங்களை அழிப்பதுடன் மட்டுமல்லாது எமது தொழிலுபகரணங்களையும் நாசம் செய்து அள்ளிச் சென்று விடுகின்றன. பல லட்சம் ரூபாக்களைச் செலவு செய்த நாம் தொழில் புரிந்து வரும் மீன்பிடி வலைகளினை இழுவைப் படகுகள்  நாசம் செய்து அள்ளிச்சென்று விடுகின்றன.  இந் நிலைமையால் மீனவர்களாகிய நாம் மேலும் மோசமாகப் பாதிக்கப்படுகின்றோம். தங்கள் வலைகளைப் பறிகொடுத்த பலர் இன்னமும் அதிலிருந்து மீள முடியாமல் இருக்கின்றார்கள். இந் நிலைமையானது தொடர்கதையாகின்றது. இந் நிலையில் இழுவைப்படகுகள் அடாத்தாக தொழில் புரியும் நாட்களில் நாம் எமது தொழிலுக்குச் செல்ல முடியாதவர்களாக முடக்கப்படுகின்றோம்.

“யுத்தத்தினால் அழிந்த போன நிலத்தையும் இழுவைமடியினால் அழிந்த கடலினையுமா நாம் எமது எதிர்கால சந்ததிக்க விட்டுச் செல்வது..?”  அழிவை ஏற்படுத்தும் இழுவை மடித் தொழிலை நாம் முற்றாகப் புறக்கணிக்கின்றோம். இவ் விடயம் தொடர்பில் பல்வேறு தரப்பினரிடத்தும் நாம் தொடர்ச்சியாக முறையிட்டு வருகின்றோம். கவனயீர்ப்பப் பொராட்டங்களையும் நடாத்தியிருந்தோம். ஆனால் எமது பிரச்சனை தீர்ந்தபாடில்லை. இது எமக்கு மிகுந்த வேதனையையும் விசனத்தையுமே ஏறபடுத்துகின்றது.

இந் நிலைமையானது கடலை நம்பி வாழும் எங்களுக்குத் தொர்கதையா..? இதற்கான முடிவு கிடைக்காதா..? என்கின்ற ஏக்கத்துடனேயே எமது ஜீவனோபாயம் தொடர்கின்றது. எனவே இவ்விடயம் தொடர்பில் தங்களது மேலான கவனத்தினை செலுத்தி எமது வாழ்வாதாரத் தொழிலினை நாம் நிம்மதியான வகையில் மேற்கொள்வதற்கு தங்களால் ஆன நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு தயவுடன் கேட்டு நிற்பதுடன் தங்களது நடவடிக்கைக்குரிய எமது பூரண ஆதரவினையும் வழங்கத் தயாராகவுள்ளோம் என்பதனையும் தெரிவித்து நிற்கின்றோம் – என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: