இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல – எதிரணி உறுப்பினர்கள் புரிந்துசெயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் கோரிக்கை!

Wednesday, August 18th, 2021

இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல என்பதை எதிரணி உறுப்பினர்கள் புரிந்துசெயற்பட வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இன்னும் 2 வருடங்களாவது கொரோனாவுடன்தான் வாழ வேண்டிவருமென வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் மக்களை காப்பதற்கு உள்ள ஒரே வழி தடுப்பூசிதான். அதனை வழங்கும் நடவடிக்கையை அரசு துரிதப்படுத்தியுள்ளது.

எனினும், சிற்சில தவறுகளை பெரிதுப்படுத்தி மக்களை குழப்புவதற்கு எதிரணி முற்படுகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பாதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் –

கொரோனா நெருக்கடி நிலைமையால் நாடு என்ற வகையில் எமக்கும் பல சவால்களை சந்திக்கவேண்டியேற்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், சீனா உட்பட உலக நாடுகளிலும் இதே நிலைமைதான் காணப்படுகின்றது.

பலம் பொருந்திய நாடுகள்கூட பின்னடைவைச் சந்தித்துள்ளன. இவ்வாறான நெருக்கடி நிலைமையிலும் நாட்டு மக்களுக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்களையும், எதிர்கால வேலைத்திட்டங்களையும் செயற்படுத்திவருகின்றோம். கடந்த வருடம் மார்ச்சில் நாட்டை முடக்கினோம். அதன்பின்னரும் முடக்கப்பட்டது.

ஆனால் அவ்வப்போது வைரஸ் தொற்று தலைதூக்கும் அபாயம் காணப்படுகின்றது. அடுத்துவரும் வாரங்கள் அல்ல அடுத்துவரும் ஒவ்வொரு நாளும் தீர்க்கமானது. வைத்திய நிபுணர்களின் கூற்றின்பிரகாரம், குறைந்தபட்சம் இன்னும் 2 வருடங்களாவது கொரோனாவுடன்தான் வாழப்பழக வேண்டிவரும்.

எதிர்ப்பாரா விதமாகத்தான் தொற்று நிலை உருவானது. ஆனாலும் நாட்டு மக்களுக்காக செய்ய வேண்டியவத்தை நாம் செய்துவருகின்றோம்.

தற்போதைய சூழ்நிலையில் வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசிதான் ஒரே வழி. அதனை துரிதமாக வழங்கி, மக்களை மீட்க நடவடிக்கை எடுத்துவருகின்றோம்.

கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து எமது நாட்டு சுகாதாரத்துறையினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றனர். பலருக்கு நித்திரைகூட இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலையை மீளமைக்கும் முயற்சிக்கு தமிழ்க் கூட்டமைப்பே தடை  - அமைச்சர் ரிஷா...
தொழில்நுட்பப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே உள்ளுராட்சி மன்ற தேர்தல் சீர்திருத்த சட்டமூலம் - அமைச்சர் ...
யாழ். பல்கலையில் 6 விரிவுரையாளர்களுக்கு பேராசிரியர்களாகப் பதவி உயர்வு - ஒப்புதல் கொடுத்தது பல்கலைக்க...