ஆயிரம் ரூபாவை விட அதிக ஊதியம் வழங்க – முத்தையா முரளிதரன்!

Sunday, January 6th, 2019

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு எங்களின் ஆதரவும் என்றும் இருக்கும் என முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முத்தையா முரளிதரன் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சம்பளப் பிரச்சினை தொடர்பாக பேசினார். இதன் போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கிய அவர்,

தற்போது வழங்கும் தொகை தோட்ட தொழிலாளர்களுக்கு போதுமானது அல்ல. தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொகையாக ஆயிரம் ரூபாவை விட அதற்கு அதிகமாக வழங்க வேண்டும். இது என்னுடைய எதிர்பார்ப்பாகும்.

இதனால் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல்வாதிகள் தொழிலாளர்கள் படும் கஷ்டங்களை புரிந்து கொண்டு சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும். தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு எங்களின் ஆதரவும் என்றும் இருக்கும்.

தொழிலாளர்களை பணிப்புறக்கணிப்பு மற்றும் ஹர்த்தாலில் ஈடுப்படுத்த வேண்டாம். அவர்களின் பணிகளை தடை இல்லாமல் முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு முன்னெடுக்கப்படுமாயின் அவர்களுக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

சம்பள பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் தொழிலாளர்களை தொழிலுக்கு செல்ல வேண்டாம் என சொல்பவர்களால் அவர்களின் நாள் சம்பளத்தை கொடுக்க முடியுமா ? முடியாது.

இதனால் கடைசியில் பாதிப்படைவது தொழிலாளர்கள் தான். எனவே இதற்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றார்.

Related posts: