ஆசிரியைகள் பிரசவ விடுமுறையில் செல்வதால் மாணவர் கல்வியில் பெரும் பாதிப்பு – கல்வியமைச்சின் ஆய்வில் தகவல்!

Wednesday, May 30th, 2018

நாடளாவிய ரீதியிலுள்ள அரச பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் பெண் ஆசிரியர்களில் வருடாந்தம் 10,000 க்கும் மேற்பட்டோர் பிரசவ விடுமுறையில் செல்வதால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் பாரிய தாக்கம் செலுத்தப்படுவதாக கல்வியமைச்சு மேற்கொண்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

நாட்டிலுள்ள 10,042 பாடசாலைகளில் 2,32,555 ஆசிரியர்கள் கற்பித்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுள் 1,72,000 பேர் பெண் ஆசிரியர்களாவர். இவ்வாறான நிலையில் கூடுதலான பெண் ஆசிரியர்கள் இவ்வாறு மகப்பேறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நீண்ட லீவில் செல்வதனால் பாடசாலைகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றன.

இப் பிரச்சினையை தீர்ப்பதற்கு வலய மட்டத்தில் ஆசிரியர் குழுக்களை அமைத்து விடுமுறை பெறும் ஆசிரியைகளுக்குப் பதிலாக வேறு ஆசிரியர்களை கற்பித்தல் பணிகளில் ஈடுபடுத்தவும் ஆசிரியர் தேவையை கணிப்பிடுவது தொடர்பான சுற்றறிக்கையில் திருத்தம் கொண்டு வருவது பற்றியும் கல்வியமைச்சு கவனம் செலுத்திவருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை ஆசிரியர்கள் உட்பட சகல அரசாங்க ஊழியர்களுக்கும் தாம் பெற்றெடுக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் 84 நாட்கள் கொண்ட சம்பளத்துடனான லீவு, பின்னர் 84 நாட்கள் அரைச் சம்பள லீவு, அதன் பின்னர் தேவையாயின் பிள்ளையின் சுக நலனைப் பொறுத்து இரண்டு வருட சம்பளமற்ற லீவும் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆசிரியர்களுக்கு குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கான குறுகிய கால லீவு வழங்கப்படுவதில்லை. இதேவேளை தூரப் பிரதேசங்களில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு கர்ப்பிணி காலம் 6 மாதம் முடிவடைந்த பின் சுகப்பிரசவத்திற்காக தமது வாழ்விடத்திற்கு அருகில் தற்காலிக இடமாற்றம் வழங்கப்படுவதனாலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. இது குறித்து கல்வியமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

Related posts: