அவசியமான உரத்தை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு நடவடிக்கை – அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Wednesday, September 9th, 2020

பெரும்போகத்திற்கு அவசியமான உரத்தை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அரசாங்கம் எதிர்வரும் பெரும்போகத்தில் இந்நாட்டு விவசாய வரலாற்றில் பயிர்ச் செய்கையில் புரட்சி ஒன்றை ஏற்படுத்த எதிர்பார்க்கின்றது. கைவிடப்பட்டுள்ள காணிகள் உள்ளிட்ட பரந்தளவிலான பயிர் நிலங்களில் பல தசாப்தங்களின் பின்னர் நெல் உட்பட பல பயிரினங்களை பயிரிடுவதற்கும் விவசாயிகள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

இவ்வருடத்தில் இறக்குமதி செய்யப்பட்ட உரத்திற்கு உரிய வகையில் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. பெருந்தோட்டங்களுக்கும் விவசாயிகளுக்கும் அவசியமான உரத்தை உரிய அளவில் உரிய நேரத்தில், உயர் தரத்துடன் வழங்க வேண்டுமென்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பசளை உற்பத்தி மற்றும் விநியோகங்கள் இரசாயன பசளைகள் மற்றும் கிருமிநாசினி பயன்பாட்டு ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதனிடையே பயிர்ச்செய்கையில் புரட்சியொன்றை ஏற்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

தட்டுப்பாடு இன்றி உரத்தை வழங்குவதற்கு அரசாங்கத்தின் மற்றும் தனியார் துறையின் இறக்குமதியாளர்களுக்கு வேண்டிய பின்புலத்தை தயார் செய்து கொடுத்துள்ளதாக பசில் ராஜபக்ஷ சுட்டிக் காட்டியுள்ளார்.

இறக்குமதியில் தங்கி இருக்காது நாட்டுக்கு தேவையான உரத்தை நாட்டிலேயே உற்பத்தி செய்துகொள்ள வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் ஆய்வுகளை நடத்தி பிரதான உர வகைகளை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் உள்நாட்டு சந்தைக்கு வழங்க முடியுமென்று பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


எந்த ஒரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதவர்களே இதுவரை கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர் – சுகாதார அ...
காரைநகர் சண்டிலிப்பாய் ஊர்காவற்றுறை/ சங்கானை பிரதேச மக்களுக்கு புதிய நடைமுறையில் எரிபொருள் விநியோகம்...
கிரிக்கெட் இடைக்கால சபையை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்கொண்ட அறிவிப்பு பக்கச் சார்பானது...