அமெரிக்க அரசின் மெத்தன போக்கே இத்தனை அழிவுக்கும் காரணம் – The New York Times குற்றச்சாட்டு!

Monday, April 6th, 2020

கொரோனா வைரஸ் தொற்றினால் உலக நாடுகள் அனைத்தும் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.

இது வரையில், உலகம் முழுவதும் 12 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 69 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

ஆரம்பத்தில் சீனாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குறிப்பாக அமெரிக்கா கொரோனா வைரஸ் தொற்றினால் நிலைகுலைந்து போயுள்ளது என்றே கூறவேண்டும். அங்கு இது வரையில் 336,673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,616 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் கடந்த சில நாட்களாக நாள் ஒன்றுக்கு சுமாராக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் இந்த நிலைக்கு அந்நாட்டு அரசின் மெத்தன போக்கே காரணம் என The New York Times செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“சீனாவில் கொரோனா வைரஸ் பரவியது பற்றி புத்தாண்டுக்கு முந்தைய நாளில் தான் சர்வதேச நாடுகளுக்கு சீனா அறிவித்தது.

இந்நிலையில், ஜனவரி மாதம், முதல் 2 வாரங்களுக்கு சீனாவில் இருந்து வருபவர்களை அமெரிக்க விமான நிலையங்களில் பரிசோதிக்கவில்லை.

இதனால், சீனாவின் வுகான் நகரில் இருந்து சுமார் 4 ஆயிரம் பேர் அமெரிக்காவுக்கு வந்து விட்டனர். ஜனவரி மாத இடைநடுவில் தான் விமான நிலையங்களில் பரிசோதனை செய்ய தொடங்கினர்.

அதிலும், லொஸ் ஏஞ்சல்ஸ், சென் பிரான்சிஸ்கோ, நியூயோர்க் ஆகிய நகரங்களில் மட்டும் சோதனை நடத்தப்பட்டது. அங்கும் கூட வுகானில் இருந்து வந்தவர்களுக்கு மட்டும் பரிசோதனை நடத்தப்பட்டது.

பின்னர்தான், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், பயண தடை விதித்தார். அவர் தடை விதிப்பதற்குள், சீனாவில் இருந்து 1,300க்கு மேற்பட்ட நேரடி விமானங்களில் 17 அமெரிக்க நகரங்களுக்கு 4 லட்சத்து 30 ஆயிரம்பேர் வந்து விட்டனர்.

அவர்களில், பயண தடை அறிவித்த பிறகு 2 மாதங்களில் வந்த 40 ஆயிரம் பேரும் அடங்குவர். வந்தவர்களில், அமெரிக்கர்கள் மட்டுமின்றி வேறு நாட்டினரும் கணிசமாக உள்ளனர்.

அவர்களை பற்றிய எந்த விவரங்களும் அமெரிக்க அரசிடம் இல்லை. அவர்களை கண்காணிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சீனாவில் இருந்து வேறு நாடுகள் வழியாக அமெரிக்கா வந்தவர்களை பற்றிய எந்த கணக்கும் அமெரிக்க அரசிடம் இல்லை.

பயணத்தடைக்கு பிறகும், அமெரிக்கர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு, பீஜிங் நகரில் இருந்து கடந்த வாரம் வரை விமானங்கள் வந்து கொண்டிருந்தன.

அப்படி வந்த 279 விமானங்களில், ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் வந்துள்ளனர். அவர்களிடம் ஏனோ தானோ என்று பரிசோதனை நடத்தப்பட்டது.

அமெரிக்க அரசின் இந்த மெத்தனமே, நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க காரணம் ஆகும். கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்தாலும், தாமதமாக அமுல்படுத்தப்பட்டதாக” அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Related posts: