அனைத்துக் குடும்பங்களுக்கும் பொருத்தமான வீடுகளைப் பெற்றுத் தரக்கூடிய சூழல் உருவாக்கித் தரப்படும் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச உறுதி!

Sunday, June 27th, 2021

மகிழ்ச்சியாக வாழும் குடும்பம் என்ற எண்ணக்கருவின் கீழ் இந்த நாட்டில் வாழும் அனைத்துக் குடும்பங்களுக்கும், வாழ்வதற்குப் பொருத்தமான வீடுகளைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய சூழல் உருவாக்கித் தரப்படும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

2014ஆம் ஆண்டுக்கு முன்னர் நாம் வெற்றிகரமாக ஆரம்பித்த வீடமைப்பு அபிவிருத்தித் திட்டத்தை மீண்டும் விரைவாக நடைமுறைப்படுத்த ஆரம்பித்திருக்கிறோம்.

எதிர்வரும் 4 வருட காலப்பகுதியில், மூன்று இலட்சம் வீடுகள், அரசாங்கத்தினாலும் அரச, தனியார் துறைகள் இணைந்தும் நடைமுறைப்படுத்தும் திட்டங்களின் ஊடாக நிர்மாணிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த செயற்றிட்டங்களுக்கு அமைய 60 ஆயிரம் நகர வீடுகளும் 200 ஆயிரம் கிராமிய வீடுகளும் நிர்மாணிக்கப்படுகின்றன. அதேபோன்று 40 ஆயிரம் தோட்டப் பகுதி வீடுகள், கூலி வீடுகளும் எமது திட்டத்திற்குள் வருகின்றன.

இந்த வீடுகளில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. மேலும், சுமார் 10 ஆயிரம் வீடுகள் இந்த வருடம் நிறைவுக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அத்துடன் கடந்த அரசாங்கத்தால், குறைந்த வருமானம் பெறுவோருக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள அடுக்குமாடி வீடுகளின் எண்ணிக்கை 450 ஆக இருந்தது. என்றாலும் தற்போது நாம் குறைந்த வருமானம் பெறுவோருக்கு 7,000 அடுக்கு மாடி வீடுகளை நிர்மாணித்து வருகிறோம். அதேபோன்று நடுத்தர வருமானம் பெறுவோருக்கு 3,000 அடுக்குமாடி வீடுகளை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்த ஜனாதிபதி 14 ஆயிரம் கிராமிய வீடுகள் ஒரு கிராமத்துக்கு ஒரு வீடு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: