அனுமதிக்கப்பட்ட சமையல் எரிவாயு கொள்கலன்களை மாத்திரம் சந்தைக்கு விநியோகிக்லாம் – லிட்ரோ – லாஃப்ஸ் கேஸ் நிறுவனங்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

Friday, December 17th, 2021

இலங்கை தரநிர்ணய நிறுவகத்தினால் அனுமதிக்கப்பட்ட சமையல் எரிவாயு கொள்கலன்களை மாத்திரம் சந்தைக்கு விநியோகிக்குமாறு லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் கேஸ் நிறுவனங்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிப்புகள் குறித்து விசாரணை நடத்துமாறு கோரி சிவில் சமூக ஆர்வலர் நாகாநந்த கொடித்துவக்கு தாக்கல் செய்த மனு தொடர்பில் இடைக்கால உத்தரவொன்றை வௌியிட்டு ருவன் பெர்னாண்டோ மற்றும் சம்பத் விஜயரத்ன ஆகிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்படி, தற்போது சந்தையில் வெளியிடப்பட்டுள்ள பயன்படுத்தப்படாத எரிவாயு சிலிண்டர்களை மீளப் பெற நடவடிக்கை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றுமொரு உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரில் உள்ளடங்கியுள்ள கலவையை அதில் காட்சிப்படுத்துமாறு குறித்த நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது நுகர்வோர் வசம் உள்ள பாதி பயன்படுத்தப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை மீளப்பெறுமாறும், அதற்கான கட்டணத்தை செலுத்துமாறும் குறித்த நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு நாகாநந்த கொடித்துவக்கு இதற்கு முன்னர் நீதிமன்றில் கோரியிருந்தார்.

நுகர்வோர் விவகார அதிகாரசபை இது தொடர்பில் ஆராய்ந்து உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பின்னர் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்ட நீதிபதிகள் குழாம், எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டனர்

இதேவேளை, எதிர்காலத்தில் நுகர்வோர் அதிகார சபை மற்றும் இலங்கை தரநிர்ணய நிறுவகத்தின் அனுமதிபெற்ற எரிவாயு கொள்கலன்கள் மாத்திரமே சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனம் நேற்று(16) உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: