அனர்த வலயங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் முழுமையாக ஊரடங்கு சட்டத்தை தளர்த்த அரசாங்கம் தீவிர ஆலோசனை – நாளை மாலைக்குள் இறுதித் தீர்மானம் வெளிவரும் எதிர்பார்ப்பு!

Saturday, April 25th, 2020

கொரோனா வைரஸ் பரவும் அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களைத் தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டத்தைத் முழுமையாக தளர்த்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தும் மாவட்டங்களில் சுகாதாரக் கட்டுப்பாடுகளை அதிகரிப்பதற்கு சுகாதாரத்துறையினர் அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறியிருப்பதாகவும் அறியமுடிகின்றது.

அத்துடன் இதுகுறித்த இறுதித் தீர்மானம் நாளை மாலைக்குள் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை தற்போது நாடளாவிய ரீதியில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் நாளை மறுநாள் திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினை எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணிக்கு மீண்டும் தளர்த்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று அதிகாலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கும் கண்டி மாவட்டத்தில் அலவாத்துகொடை பொலிஸ் பிரிவு , கேகாலை மாவட்டம் வராக்காபொல பொலிஸ் பிரிவு மற்றும் அம்பாறை மாவட்டம் அக்கரைபற்று பொலிஸ் பிரிவுகளில் தற்போது அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் 27.04.2020 திங்கள் காலை ஐந்து மணிக்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களுக்கு 24.04.2020 இரவு 8 மணி முதல் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் 27.04.2020 திங்கள் காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு , களுத்துறை , கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்குள் பிரவேசிப்பது மற்றும் அங்கிருந்து வெளியேறுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

தளர்ததப்படும் ஊரடங்கு சட்டம் மீள அமுல்படுத்துவதா இல்லையா என்பது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை பொது மக்கள் நடந்து கொள்ளும் விதத்தினை கருத்திற் கொண்டே ஊரடங்கு சட்டத்தை நீக்குவதா அல்லது நீடிப்பதா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்

இதேவேளை சிலர் ஊரடங்கு சட்டம் மற்றும் சுகாதார ஆலோசனைகளை கருத்திற் கொள்ளாமல் செயற்பட்டமையினால் கடற்படை சிப்பாய்கள் உட்பட கொழும்பு 12 பகுதி மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி தெரிவித்துள்ளார்.

எனினும் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் நாடாளவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் என்று பொலிஸ் தலைமையகம் இன்று அதிகாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: