அதிகரிப்பு போதாது – அகில இலங்கை பஸ் உரிமையாளர்கள் சங்கம்!

Thursday, June 22nd, 2017

எதிர்வரும் ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், பஸ் போக்குவரத்துக் கட்டணத்தை 6 சதவீதத்தால் உயர்த்துவதற்கு, போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ள போதிலும், அந்தக் கட்டணம் 10 சதவீதத்தால் அதிகரிக்கப்படல் வேண்டும் என்று, அகில இலங்கை பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, போக்குவரத்து அமைச்சு,  தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும், இது தொடர்பாக எந்தவொரு சங்கத்துடனும் கலந்துரையாடப்படவில்லை என்று, அகில இலங்கை பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஸ்டேன்லி பெர்ணான்டோ தெரிவித்தார்.

“முன்னைய அரசாங்கத்தின் போது, பஸ் கட்டணங்கள் உயர்த்தப்படும் போது, பஸ் சங்கங்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. ஆனால், இந்த அரசாங்கத்தில், போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா, எம்மை எந்தவொரு கலந்துரையாடலுக்கும் அழைக்கவில்லை. பஸ் கட்டண உயர்வு தொடர்பாக, எமது சங்கத்தால் முன்வைக்கப்படும் எந்தவொரு கோரிக்கையாக இருந்தாலும், அதனை அமைச்சர் புறக்கணிக்கின்றார்” என்றும் அவர் கூறினார்.

“பஸ் கட்டணத்தை 6 சதவீதத்தால் மாத்திரமே அரசாங்கம் உயர்த்தும் என்றால், அதற்கு இணங்கப்போவதில்லை. சேவையில் ஈடுபடும் பஸ்ஸின் அதிகபட்ச கட்டணம், 50 ரூபாயாகக் காணப்படுகின்றது. 6 சதவீதம் உயர்த்தப்படுமாயின், அந்தத் தொகை 53 ரூபாயாக மாத்திரமே மாறும். இந்தத் தொகையை, பயணிகளிடமிருந்து பெற்றுக்கொள்வது சிரமம் என்பதோடு, மிகுதித் தொகையைக் ​கொடுப்பதும் சிக்கலான விடயமாக மாறும்” என்றும் அவர் கூறினார்.

“டயர், எண்ணெய் மற்றும் பற்றரி ஆகியவற்றின் விலை, இந்த அரசாங்கத்தினால் 200 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. பஸ்களுக்கான பொருத்து உபகரணங்களின் விலையும், 100 சதவீதத்தால்

அதிகரிக்கப்பட்டுள்ளது. அபராதம், பங்குகள் மற்றும் ஏனைய செலவுகள் என்று அனைத்தும் அதிகரித்துவிட்டன.
“75 சதவீதமான மக்கள், அவர்களுக்கென்ற சொந்த வாகனங்களைப் பயன்படுத்துவதால், பொதுப்போக்குவரத்துச் சேவையைப் பயன்படுத்துவது கிடையாது. இனி பராமரிக்க முடியாது என்ற அளவுக்கு, தற்போது நிலைமை மோசமடைந்துவிட்டது. எனவே, எம்மால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை அங்கிகரிக்கப்படாவிடின், மீண்டுமொரு பணிப்பகிஷ்கரிப்பில் நாம் ஈடுபடுவோம்” என்று அவர் மேலும் கூறினார்.

Related posts:

நாவற்குழி விகாரைக்கு எதிராக எவரும் நீதிமன்றம் செல்ல முடியும் - சட்டம் அனைவருக்கும் ஒன்றே என்கிறார் வ...
நாட்டின் மீது சேறு பூச சதித் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது - சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் அ...
வடக்கின் நிலைமை குறித்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது - பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி பெலிண்டா ரவேலிய...