வைரஸில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் டெங்கு பரவும் வேகம் அதிகரிப்பு!

Tuesday, March 21st, 2017

டெங்கு வைரஸ் மாற்றத்தினால் டெங்குக் காய்ச்சல் பரவும் வேகமும் அதிகரித்துள்ளதாக, தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷிலா சமரவீர தெரிவித்துள்ளார்.

வருடத்தின் இதுவரையான மூன்று மாதங்களில் 22,500 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, காய்ச்சலால் பீடிக்கப்படும் சந்தர்ப்பத்தில், உடனடியாக வைத்தியரை நாடி உரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளுமாறும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் வேகமாக பரவியுள்ள டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீடுகளின் சூழல்களை துப்புரவு செய்யும் நடவடிக்கைகளில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை குழுக்களாக ஈடுபடுத்தவுள்ளதாக சிவில் பாதுகாப்புத் திணைக்கள ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம தெரிவித்தார்.இதன்பொருட்டு சுமார் 350 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை திருகோணமலை பிரதேசத்திற்கு அனுப்பிவைத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts: