விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை!

Thursday, January 12th, 2017

கமநல அபிவிருத்தித் திணைக்களத்தில் கடமையாற்றும் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய மேலதிக கொடுப்பனவுகள் எவையும் வழங்கப்படுவதில்லை என யாழ் மாவட்டத்தில் கடமையாற்றும் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்

கடந்த காலங்களில் யாழ் மாவட்டத்தில் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் கடமைக்கு இணைக்கப்படாதமையால் ஏற்பட்ட சிரமங்களைப் போக்கும் நோக்குடன் போட்டிப்பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்ட விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் யாழ.; கமநல அபிவிருத்தித் திணைக்களத்துக்கு இணைக்கப்பட்டனர்.

இவர்களில் அதிகளவானோர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாவர். தமிழ்ப்பிர தேசத்தில் தமிழ்மொழி தெரியாத உத்தியோகத்தர்களைக் கடமைக்கு இணைத்தமை தொடர்பில் பல தரப்புக்களிலிருந்தும் எழுந்த எதிர்ப்புக்களையடுத்து யாழ்ப்பாணத்துக்கு இணைக்கப்பட்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டனர். இதனால் எஞ்சிய 17 தமிழ் உத்தியோகத்தர்களே தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றி வருகின்றனர்

யாழ். மாவட்டத்தில் 353 விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் இருக்கவேண்டிய போதிலும் தற்போது 17 உத்தியோகத்தர்களே கடமையாற்றுகின்றனர். 336 விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களுக்குத் தொடர்ந்தும் வெற்றிடங்களே நிலவுகின்றன.
ஒரு பிரிவுக்கு ஒரு உத்தியோகத்தர் கடமையாற்ற வேண்டிய நிலையில் யாழ் மாவட்டத்தில் ஒரு உத்தியோகத்தர் மிக அதிகளவான பிரிவின் வேலைகளைச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வேறு மாவட்டங்களில் ஒரு உத்தியோகத்தர் ஒரு பிரிவுக்கு மட்டுமே இணைக்கப்பட்டுள்ள போதிலும் அவர்களுக்குரிய பிரயாணப்படிகள் மற்றும் இணைந்த படிகள் அனைத்தும் வழங்கப்படுகின்றன.
ஆனால் யாழ். மாவட்டத்தில் ஒரு உத்தியோகத்தர் அதிகளவான பிரிவுக்குரிய கள வேலைகள் உட்பட அனைத்து வேலைகளையும் செய்கின்ற போதிலும் அவர்களுக்கு பிரயாணப்படிகளோ, இணைந்த படிகளோ வழங்கப்படுவதில்லை.

யாழ் மாவட்டத்தில் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் கடமையில் இணைந்து ஒன்றரை வருடங்கள் ஆகின்ற நிலையில் இதுவரை அவர்களுக்குரிய கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை.
பதிற்கடமைக் கொடுப்பனவு தொடர்பில் அகில இலங்கை விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் சங்கத்தினர் விவசாய அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்றமையை அடுத்து அவர்களுக்குரிய பதிற்கடமைக் கொடுப்பனவுகளைக்; கொடுப்பதற்கு விவசாய அமைச்சர் இணங்கியிருந்தார்.
பதிற்கடமை புரியும் உத்தியோகத்தர்களுக்குப் பதிற்கடமை நியமனங்களை வழங்குமாறும் பதிற்கடமைக் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக உத்தியோகத்தர்களின் விவரங்களை அனுப்புமாறும் கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகத்தால் சகல மாவட்டங்களுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் யாழ.; மாவட்டத்தில் பல பிரிவுகளில் பணிபுரியும் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களுக்கு பதிற்கடமை நியமனங்கள் இதுவரை வழங்கப்படவுமில்லை. பதிற்கடமை புரியும் உத்தியோகத்தர்களுக்குரிய கொடுப்பனவுக்கான விண்ணப்பப்படிவங்கள் பூர்த்தி செய்து அனுப்பப்படவுமில்லை.
இதனால். யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பதவியிலுள்ள வேறு மாவட்டத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கு அனைத்துக் கொடுப்பனவுகளும் வழங்கப்படுகின்ற போதிலும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களுக்கு எதுவித கொடுப்பனவுகளும் வழங்கப்படுவதில்லை.
ஒரு பிரிவில் மாத்திரம் கடமையாற்றும் உத்தியோகத்தருக்கே ஏனைய மாவட்டங்களில் அனைத்துக்கொடுப்பனவுகளும் வழங்கப்படும் நிலையில் அதிகளவான பிரிவுகளின் கள வேலைகளையும் மற்றைய வேலைகளையும் செய்யும் தமக்கு எதுவித கொடுப்பனவுகளும் வழங்கப்படாமலிருப்பது அநீதியான செயல் என்பதுடன் தமக்கு மிகுந்த வேதனையையும் தருகின்றது என யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் யாழ். மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளருடன் பல தடவைகள் பேசியும்; தீர்வு கிடைக்கவில்லை எனவும் விரைவில் இப்பிரச்சினை தொடர்பில் விவசாய அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு செல்லவுள்ளனர் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Related posts: