விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நிவாரணங்களை வழங்கும் வேலைத்திட்டத்தை கூட்டுறவுத் துறையால் வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் – கூட்டுறவுத்துறைப் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, July 6th, 2021

விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நிவாரணங்களை வழங்கும் விரிவான வேலைத்திட்டத்தை, கூட்டுறவு இயக்கத்தினால் மேற்கொள்ள முடியுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதேவேளை விவசாயிகளின் உற்பத்திகளை நேரடியாகக் கொள்வனவு செய்து, தமக்கான இலாபத்தை வைத்துக்கொண்டு, நுகர்வோருக்கு அவற்றை நிவாரண விலைக்குப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில், கூட்டுறவுத்துறை தலையிட முடியுமென்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் இதனூடாக வீழ்ச்சியடைந்துள்ள கூட்டுறவு இயக்கத்தை, இதன் மூலம் திறந்த பொருளாதாரத்துடன் கட்டியெழுப்பும் அதேவேளை அனர்த்த நிலைமைகளின் போது பாரியதொரு சமூகப் பொறுப்பை நிறைவேற்றவும் முடியுமென்று, ஜனாதிபதி சுட்டிகாட்டியுள்ளார்.

உலகெங்கிலும் உள்ள 112 நாடுகளில், கூட்டுறவு இயக்கம் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதத்தில் வரும் முதலாவது சனிக்கிழமையன்று, சர்வதேச கூட்டுறவுத் தினமாக கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு, ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற 99 ஆவது சர்வதேசக் கூட்டுறவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

உலகின் பல நாடுகளினது உற்பத்திகளை விநியோகிக்கும் மக்கள்நேயப் பொறிமுறையாகவே, கூட்டுறவுத் துறை செயற்படுகின்றது. மக்கள்நேய அரசாங்கங்கங்கள் ஆட்சியில் இருந்த அனைத்துச் சந்தர்ப்பங்களிலும், நாட்டின் கூட்டுறவு இயக்கமும் பலமானதாக இருந்தது.

அதனடிப்படையில் மக்கள்மையப் பொருளாதாரத் தொலைநோக்கினூடாகக் கூட்டுறவுத் துறையைப் பலப்படுத்துவதற்கு, “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட 9 அம்ச முன்மொழிவை நடைமுறைப்படுத்துவதாகவும், இதன்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசாங்கம் திட்டமிட்டுள்ள சேதனப் பசளை மற்றும் சூரிய மின்சக்தி நிகழ்ச்சித் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கும், கூட்டுறவுத் துறையால் விரிவான பங்களிப்பை வழங்க முடியுமென்றும் இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: