முல்லைத்தீவு நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Thursday, May 18th, 2017

பாதிரியார் ஒருவராலும் பொது அமைப்புக்களாலும் முள்ளிவாய்க்கால் தேவாலயம் ஒன்றிற்கு அருகில் நடத்தப்படவிருந்த நினைவேந்தல் நிகழ்விற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த தடையுத்தரவில், சமர்ப்பிக்கப்பட்ட ஏ அறிக்கைக்கு அமைய முள்ளிவாய்க்கால் கிழக்கு கத்தோலிக்க இல்லத்திற்கு அருகில் நினைவேந்தல் செய்வதனால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும், ஒருமைப்பாட்டிற்கும், சமாதானத்திற்கும் அமைதிக்கும் பங்கம் ஏற்படும் எனக் கருதி பாதிரியார் இராயேந்திரன் எழில்ராயன் உட்பட அனைவருக்கும் குற்றவியல் நடைமுறைக் கோவை பிரிவு 106ற்கு இணக்க 14 நாட்களுக்கான இடைக்கால தடையுத்தரவை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் விதிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் இறந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கற்களை வைத்து நினைவேந்தல் செய்வதாக கூறப்பட்டது. அதில் பொறிக்கப்பட்ட பெயர்கள் யாருடையது என்பது பற்றி எம்மால் அறிந்து கொள்ள முடியாதுள்ளது.

இதனால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் ஒருமைப்பாட்டிற்கும் சமாதானத்திற்கும் அமைதிக்கும் பங்கம் ஏற்படலாம் என சந்தேகித்து பொலிசாரால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடைக்கால தடையுத்தரவிற்கு நேற்று விண்ணப்பம் செய்யப்பட்டமைக்கு அமைவாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பகுதியில் மட்டுமே நினைவேந்தல் செய்ய தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளில் நினைவேந்தல் மேற்கொள்ள முடியும், ஆனால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் ஒருமைப்பாட்டிற்கும் சமாதானத்திற்கும் அமைதிக்கும் பங்கம் ஏற்படாதவாறு நிகழ்வுகளை மேற்கொள்ள வேண்டும் என குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி, முல்லைத்தீவிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்

Related posts: