முடியாதது எதுவும் இல்லை – பிரதமர் மஹிந்த சுட்டிக்காட்டு!

Saturday, July 3rd, 2021

நாட்டில் பின்தங்கிய பிரதேசங்களாக ஒதுக்கப்பட்ட பல கிராமங்கள், நெடுஞ்சாலைகள் ஏற்படுத்தப்பட்டதன் பின்னர் தற்போது பாரியளவில் முன்னேற்றமடைந்து வருகின்றன என சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச, கொரோனா தொற்றுப் பரவலின் சவாலை ஒன்றிணைந்து வெற்றிகரமாக முறியடித்து நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களை தடையின்றி தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.

தெற்கு அதிவேக வீதியின் கபுதுவ பிரதேசத்தின் நுழைவாயிலைத் திறந்து வைக்கும் நிகழ்வு அலரிமாளிகையில் இருந்து வீடியோ தொழில்நுட்பம் ஊடாக இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

அன்று பின்தங்கிய பிரதேசங்களாக ஒதுக்கப்பட்ட பல கிராமங்கள், நாட்டில் நெடுஞ்சாலைகள் ஏற்படுத்தப்பட்டதன் பின்னர் தற்போது பாரியளவில் முன்னேற்றமடைந்து வருகின்றன.

நாட்டு மக்கள் மருத்துவமனைகள் மற்றும் தமது தொழில்புரியும் இடங்களுக்கு குறித்த நெடுஞ்சாலைகள் மூலம் சென்று வருகின்றனர். இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும்போது எதிர்க்கட்சியினர் பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

ஒரு சிலர் கொரோனாத் தொற்று முடியும்வரை அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்தனர். இவ்வாறு சொல்பவர்கள் உண்மையாகவே சொல்கிறார்களா, இல்லையா என்பது தொடர்பில் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

கொரோனாவைக் காரணம் காட்டி ஒன்றையும் செய்யமுடியாதென்று கூறினால் அது நாட்டு மக்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தும். நாம் நாட்டு மக்களை முறையாகப் பாதுகாப்போம். அதற்காக ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்கிறோம். நாம் ஒன்றுபட்டால் முடியாதது எதுவும் இல்லை என்றும் இதன்போது பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் மக்கள் மயப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் போலவே, கொழும்பு துறைமுகத்திலும் 17 மாடிகளை கொண்ட ‘கடல்சார் வசதி மையத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கவுள்ள இலங்கை துறைமுக அதிகாரசபையின் நடவடிக்கைகளை இது மேலும் சீராக்க உதவியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

ஒன்லைன் முறையை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்படும் இந்த மையத்திற்கு இலங்கை துறைமுக அதிகாரசபையின் அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைக்கப்படும் போது, அதன் செயல்திறனும் உற்பத்தித்திறனும் அதிகரிக்கும். அந்த நிறுவனங்களுடன் கொடுக்கல்வாங்கல் மேற்கொள்ளும் அனைவருக்கும் இது மிகவும் பயனளிக்கும்.

எனவே, இப்பணியை ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து விரைவாக நிறைவுசெய்ய வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் இலங்கை துறைமுக ஆணைக்குழுவிற்கு பலம் மற்றும் தைரியம் கிடைக்க பிரார்த்திக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கட்சி பேதங்களை மறந்து ஓரணியில் திரளுங்கள் - பொன்.சிவகுமாரனின் சகோதரர் பொன். சிவசுப்பிரமணியம்!
பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் நலன்கருதி பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் - என பரீட்சைகள் ஆணை...
இந்திய நிதி அமைச்சர் - இலங்கை உயர்ஸ்தானிகர் இடையே சந்திப்பு - கடன் மறுசீரமைப்பிற்கான உத்தரவாதத்தை வழ...