பெண்களுக்கு  உரிய மதிப்பினை வழங்குவதன் மூலம் ஆரோக்கியமான சமுதாயத்தைக் கட்டியெழுப்புவோம்: யாழ். இந்தியத் துணைத் தூதுவர் நடராஜன்

Friday, March 11th, 2016

எல்லா நாடுகளுக்கும் அரசியல் அமைப்புத் திட்டம் இருப்பது போன்று இந்தியாவிற்கும் அரசியல் அமைப்புத் திட்டமிருக்கிறது. எங்கள் அரசியல் அமைப்புத் திட்டத்திலே முதன்மைத் தலைப்புக்களில் முக்கியப்படுத்தப்பட்டிருக்கும் விடயம் பெண்களுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும், குழந்தைகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும். பெரியவர்களுக்கும், வயதானவர்களுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும். நாம் இந்த விடயத்தைக் கருத்திற் கொண்டு பெண்களுக்கு  உரிய மதிப்பினை வழங்குவதன் மூலம் ஆரோக்கியமான சமுதாயத்தைக் கட்டியெழுப்புவோம் எனத் தெரிவித்தார் யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் நடராஜன்.

வடக்கு மாகாண சபையின் சர்வதேச மகளிர் தின விழா கடந்த புதன்கிழமை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற போது விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

இந்த உலகத்தில் சர்வதேச ஆண்கள் தினம் என்ற ஒன்றில்லை. சர்வதேச மகளிர் தினம் தான் காணப்படுகிறது. அதிலிருந்தே நாங்கள் அவர்களுக்கு எவ்வளவு தூரம் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பது புலனாகிறது. அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டியது எமது கடமையும் கூட. பெண்ணென்றால் தாயின் அன்பு தான் எங்களுக்கு முதலில் நினைவுக்கு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு சிறைச்சாலையில் இருக்கும் போது அவருடைய தாயார் தினமும் தரையில் தான் உறங்குவாராம். அப்போது மோதிலால் நேரு அம்மா ஏனம்மா  நீ கட்டிலில் உறங்கவில்லை? எனக் கேட்ட போது என்னுடைய பையன் சிறைச்சாலையில் தரையில் தான் உறங்குகிறான். அதனால் நானும் தரையில் தான் உறங்குவேன் எனக் கூறுவாராம்.ஜவஹர்லால் நேரு பல தடவைகள் சிறைச் சாலைக்குச் சென்றுள்ள நிலையில் ஒவ்வொரு தடவையும் அவரது தாயார் தரையில் தான் உறங்குவாராம்.

நான் பொண்ணு பார்க்கப் போயிருந்த போது எல்லோரும் பொண்ணுட்ட ஏதாவது பேசுறதென்றால் பேசு என்று சொன்னார்கள் . அப்போ நாம வேற கறுப்பாயிருக்கிறம். அவங்களுக்குப் என்னைப் பிடிக்கிறதோ, இல்லையோ என எண்ணியவாறு பொண்ணுட்ட என்னைப் பிடிச்சிருக்கிறதா? என மாத்திரம் கேட்டேன். அவங்க சொன்ன ஒரே வார்த்தை கோயிலில குடியிருக்கிற சாமிகள் எல்லாமே கறுப்பாய்த் தானேயிருக்கிறது. ஆகவே, பெண்கள் எங்களை எந்த இடத்தில் வைத்து மதிக்கிறார்கள் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்

Related posts: