பாடசாலை மாணவர்களுக்கு மத்தியில் சுனாமி முன்னெச்சரிக்கை வேலைத்திட்டம்!

Thursday, April 5th, 2018

ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழான இலங்கை நிறுவனம் (யுன்டிபி) பாடசாலைகள் மத்தியில் சுனாமி முன்னெச்சரிக்கை தொடர்பான வேலைத்திட்டத்தை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட சுனாமி என்ற கடற்பேரலையால் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் உயிரிழந்தனர்.

இதேபோன்று நாடு முழுவதிலும் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். சுனாமியினால் 183 பாடசாலைகளுக்கும் தொழில் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனங்கள் 18 இற்கும் 4 பல்கலைக்கழகங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டன.

இதேபோன்று கரையோர மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்விக்கும் பெரும் பெரும் தாக்கத்தை ஏற்;படுத்தியது.

இதனைக் கருத்திற்கொண்டு ஜப்பான் அரசு ஆசிய பசுபிக்கடல் பிரதேசத்தில் ஏற்படும் சுனாமி தொடர்பாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் முன் எச்சரிக்கையை வலுவூட்டுவதற்கான பிராந்திய திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிவருகின்றது. சுனாமியினால் ஏற்படும் உயிராபத்தைக் கட்டுப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

யுன்டிபி நிறுவனம் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் தனது 18 உள்ளுர் அலுவலகங்களின் ஊடாக 90 பாடசாலைகளில் சுனாமி முன்னெச்சரிக்கை வேலைத்திட்டத்தை நடத்தவுள்ளது.

பங்களாதேஸ், கம்போடியா, பிஜீதீவுகள், இந்தோனேசியா, மாலைதீவு, மலேசியா, மியன்மார், பாகிஸ்தான், பப்புவா, நியூகினியா, பிலிப்பைன்ஸ், செமோவா தீவுகள், இலங்கை, தாய்லாந்து, தீமோர், வியட்னாம் உள்ளிட்ட நாடுகளில் நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்படவுள்ளது.

சுனாமி தாக்கத்திற்குள்ளான பாடசாலைகளுக்குள் தெரிவுசெய்யப்பட்ட 5 பாடசாலைகளுக்கு மத்தியில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இடர் முகாமைத்துவ அமைப்பு, செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை கடற்படை, பாடசாலை அபிவிருத்திச் சங்கங்கள் ஆகியன ஒன்றிணைந்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைவாக இந்த முன்னெச்சரிக்கை நிகழ்ச்சி காலி வித்தியாலோக மத்திய மகா வித்தியாலயத்தில் அமைக்கப்படவுள்ளது.

Related posts: