சஹ்ரான் மன்னார் வழியாக தமிழ்நாடு சென்றிருக்கலாம் – இராணுவத் தளபதி?

Monday, May 6th, 2019

இலங்கையில் நடத்தப்பட்ட பயங்ரவாதத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிம், தமிழ்நாடு வழியாக இந்தியாவின் ஏனைய நகரங்களுக்குப் பயணித்திருக்கலாம் என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

சஹ்ரான் இந்தியாவுக்கு விமானம் மூலம் பயணம் மேற்கொண்டதற்கான எந்த குடிவரவு, குடியகல்வு பதிவுகளும் இல்லை என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

எனினும், அவர் மன்னார் ஊடாக தமிழ்நாட்டுக்கு கடல் வழியாக பயணம் மேற்கொண்டிருப்பதற்கு சாத்தியங்கள் உள்ளன என்று இராணுவத் தளபதி, “தி ஹிந்து” நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.

“இந்தியா உள்ளிட்ட பிராந்தியத்தில் உள்ள புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து, இந்த பிராந்திய வலையமைப்புகள் குறித்து, இலங்கை விசாரித்து வருகிறது.

சஹ்ரான் 2018 பிற்பகுதியில் பெங்களூரு, காஷ்மீர், கேரளா ஆகிய பகுதிகளுக்கு சென்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. வெளியில் உள்ள அடிப்படைவாதிகளுடன் இணைந்து வலையமைப்பை உருவாக்குவதற்கு அவர் முற்பட்டிருக்கலாம்.

அவர்கள் அங்கு என்ன செய்தார்கள் என்று எமக்கு சரியாகத் தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக அவர்கள் அங்கு யாத்திரிகர்களாக செல்லவில்லை.பலர் தற்போது கைது செய்யப்பட்டு காவலில் உள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், காவல்துறையினரும் விசாரித்து வருகின்றனர்.

குண்டுத் தாக்குதல்களுக்கு TATP அல்லது triacetone triperoxide வெடிமருந்துகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை மிகவும் சிக்கலான குண்டுகள் அல்ல.

அவர்களில் இருவர் சலவை இயந்திர நேரக்கணிப்பு பொறிகளை வைத்திருந்துள்ளனர். தற்கொலைக் குண்டுதாரிகள் இணையத்தள வழிகாட்டல்களைப் பயன்படுத்தி இவற்றை உள்ளூரில் தயாரித்திருக்கலாம்.

அதிகபட்ச பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக படையினர் தொடர்ந்தும் உயர்ந்தபட்ச விழிப்பு நிலையில் உள்ளனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்திய அதிகாரிகள், இந்தியாவில் சஹ்ரானின் நடமாட்டங்களை தம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று தெரிவித்திருந்தனர்.

Related posts: