குற்றத்தின் தன்மையே முக்கியமானது! – பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர்!
Sunday, October 16th, 2016பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை சம்பந்தமாக ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பாக தன்னால் எதனையும் கூற முடியாது என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
வவுனியா ஈச்சங்குளம், போகஸ்வெவ பிரதேசங்களில் இரண்டு பொலிஸ் நிலையங்களை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனையை கூறியுள்ளார்.ஜனாதிபதி வெளியிட்ட கருத்து தொடர்பாக என்னால் எந்த கருத்தையும் வெளியிட முடியாது.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை தானே கொலை செய்து கொண்ட கேகாலையை சேர்ந்த முன்னாள் இராணுவ அதிகாரியின் மரணம் தொடர்பாக பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
தற்கொலை செய்துக்கொண்ட நபர் கடிதத்தில் என்ன கூறியிருந்தாலும், அதில் உள்ள உண்மை மற்றும் பொய்யை கண்டறிய பல விசாரணைகளை நடத்த வேண்டிய தேவை உள்ளது.இதற்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கின்றதா, இல்லையா சம்பவத்தில் தொடர்புடையவர்கள் இருக்கின்றனரா என்பது குறித்து கண்டறிய வேண்டும்.
ஓய்வுபெற்ற ஒருவர் எப்படி இவ்வாறான கடிதத்தை எழுதினார். அவருக்கு அச்சுறுத்தல்கள் இருந்ததா என்பதை கண்டறிய வேண்டும் எனவும் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை யாழ்ப்பாணம், கொடிகாமம் பொலிஸ் நிலையத்திற்குள் சில வருடங்களுக்கு முன்னர் சந்தேக நபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் பொறுப்பதிகார் உட்பட 11 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்ட பொலிஸ் மா அதிபர், கைது செய்யப்படும் நபரை விட குற்றத்தின் தன்மையே முக்கியமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
எந்த குற்றவாளியாக இருந்தாலும் அவருக்கு எதிராக சாட்சியங்கள் இருந்தால், அவரை கைது செய்ய வேண்டியது பொலிஸாரின் கடமை எனவும் பூஜித் ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|