உடுப்பிட்டியில் பெண்களைத் தாக்கி 47 இலட்ச ரூபா பணம் கொள்ளை!

Wednesday, June 27th, 2018

வடமராட்சி உடுப்பிட்டி பகுதியில் வீட்டில் இருந்த இரு வயதான பெண்களைத் தாக்கி 47 இலட்சம் ரூபா பணம் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கொள்ளையிடப்பட்டுள்ளது.

மருத்துவ சத்திர சிகிச்சைக்காக இந்தியாவிற்கு எடுத்துச் செல்ல வைத்திருந்த பணமே கொள்ளை போயுள்ளதாக பணத்தைப் பறிகொடுத்தவர்கள் முறையிட்டுள்ளனர்.

அதிகாலை 1 மணியளவில் வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்ளிறங்கிய கொள்ளையர்கள் வீட்டில் இருந்த பெண்களைத் தாக்கி பணம் வைக்கும் அலுமாரித் திறப்பை பறித்துள்ளனர். பின்னர் அதனைத் திறந்து பணத்தைக் கொள்ளையிட்டுக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.

ஆறு வருடங்களுக்கு முன்னர் காணி ஒன்றை விற்று அதில் கிடைத்த பணத்தையே இவர்கள் வீட்டில் வைத்திருந்ததாகத் தெரியவருகின்றது. மருத்துவ சிகிச்சைக்கென இந்தப் பணம் வைக்கப்பட்டிருந்ததாக பணத்தைப் பறிகொடுத்தவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை உடுப்பிட்டி புளியடி மற்றும் அதனையண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக கொள்ளைகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு வல்வெட்டித்துறை காவல் நிலைய எல்லைக்குள் அடுத்தடுத்து தொடரும் கொள்ளைகளைத் தடுக்க முடியாது பொலிஸார் வேடிக்கை பார்ப்பதாக அப்பகுதி மக்கள் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

இப்பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி அடிக்கடி சொந்த ஊரான அநுராதபுரம் சென்றுவிடுவதாகவும் இதனால் காவல்துறை செயலிழந்த நிலையில் இருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இது பொலிஸாரின் பொறுப்பற்ற தன்மையினையே காட்டுகின்றது எனவும் அவர்கள் விசனம் தெரிவித்தனர். முன்னதாக இப்பகுதியில் வயோதிபர்கள் தங்கியிருந்த வீடுகளிற்குள் இரவு வேளைகளில் சென்ற கொள்ளையர்கள் அவர்களை தாக்கியிருந்ததுடன் தங்கியிருந்து உணவருந்தியும் சென்றிருந்த சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.

Related posts: