இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் பொறுப்பற்ற செயலால் பாதிப்பு- ஆசிரியர் சங்கம்!

Tuesday, December 6th, 2016

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட பரீட்சை பெறுபேறுகளை பத்து மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் வெளியிடாமல் இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் பொறுப்பற்ற முறையில் காலங்கடத்தி வருகின்றமையால் பரீட்சை எழுதி விட்டு பெறுபேறுகளுக்காகக் காத்திருக்கும் பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதனை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம் தெரியப்படுத்தப்பட்ட போதிலும் கூட சரியான நடவடிக்கை எடுக்காமல் பொறுப்பற்ற முறையில் இருப்பதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் பயிற்சி முடித்தவர்களுக்கான இறுதிப் பரீட்சைகள் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றிருந்தது.

இந்த நிலையில் அவர்களது பரீட்சைப் பெறுபேறுகள் இந்த ஆண்டு ஜூன் மாதமளவில் வெளியிடப்படும் எனக் கூறப்பட்ட போதும் தற்போது வரை வெளியிடப்படாத நிலையிலுள்ளது.

மேலும், பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படாதமைக்குக் காரணமாக, பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிட்டால் பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் ஆசிரியர் தரம் உயர்த்தப்பட்டு அவர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டி வரும் எனக் கூறப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் சம்பளங்களை உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ள போது அரச ஊழியர்களாகவுள்ள பயிற்றப்பட்ட ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரித்து வழங்குவதற்கு இந்த நல்லாட்சி அரசாங்கம் விருப்பமின்றி இருந்து வருகின்றது.

ceylonteachersunion

Related posts: