முன்மொழிவுகள் யாவும் நாட்டினதும் எதிர்கால சந்ததியினரதும் நலன் கருதியே வகுக்கப்பட்டுள்ளன – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, January 21st, 2020


இந்தச் சபையிலே சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள் முன்மொழிவுகள் யாவும் இந்த நாட்டினதும், நாட்டு மக்களினதும் குறிப்பாக எமது எதிர்கால சந்ததியினரதும் நலன் கருதியே வகுக்கப்பட்டுள்ளன என்பதை நான் மீண்டும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அந்த வகையில், மேற்படி ஒழுங்குவிதிகள் முன்மொழிவுகள் தொடர்பில் அவற்றின் பின்னணிகளை மிகச் சுருக்கமாக இங்கு விபரிக்க விரும்புகின்றேன்.

இதன் முதலாவது ஒழுங்குவிதிகள் முன்மொழிவானது எமது நாட்டின் நீர் பரப்புகளுக்குள் நீர் வாழ் உயிரினங்களையும், நீரக வள மூலங்களையும் பாதுகாக்கின்ற ஒழங்கு விதிகளாகும்.

எமது நாட்டிலே காணப்படுகின்ற நீரக வள மூலங்களைக் கொண்ட நிலைகளில் நீர் வாழ் உயிரினங்களுக்கும் அதேநேரம், நீரக வள மூலங்களுக்கும் பாதிப்பினை உண்டு பண்ணக் கூடிய எவ்விதமான கழிவுப் பொருட்களையும் எறிவது – கொட்டுவது இதன் மூலமாகத் தடை செய்யப்படுகின்றது.

அண்மையிலே நான் பல்வேறு பகுதிகளுக்கு மேற்கொண்டிருந்த கள விஜயங்களின்போது நீரக வள மூலப் பகுதிகள் பலவும் கழிவுப் பொருட்களால் மிக அதிகமாகவே பாதிக்கப்பட்டிருந்தததைக் காணக் கூடியதாக இருந்தது. அவற்றை உடனடியாக சுத்தஞ் செய்யுமாறு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு பணிப்புரைகளை விடுத்தாலும், அத்தகைய கழிவுப் பொருட்களை நீர் நிலைகளில் எறிகின்றவர்களிடையே – கொட்டுகின்றவர்களிடையே இடையே விழிப்புணர்வு ஏற்படாத வரையில் கழிவுப் பொருட்களின் தாக்கத்திலிருந்து நீர் நிலைகளைப் பாதுகாத்துக் கொள்வதென்பது கடினமான காரியமாகும்.

அந்த வகையில், இதற்கான விழிப்புணர்வு ஏற்பாடுகளை தற்போது நாம் பரவலாக முன்னெடுத்து வருவதுடன், நீரக வள மூலப் பகுதிகளைத் துப்புரவு செய்கின்ற நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளோம்.

அத்துடன், கரையோரங்களில் காணப்படுகின்ற கண்டல் தாவரங்களை ஏதேனும் வகையில் அழிப்பதற்கான தடையினையும் இந்த ஒழுங்குவிதிகள் முன்மொழிவு கொண்டுள்ளது.

தற்போது உலகிலே பல்வேறு தாவர இனங்கள் அழிந்து வருவதாகவும், எமது நாட்டிலும் பல்வேறு தாவரங்கள் அழிவை எதிர்நோக்கி வருவதாகவும் ஆய்வுகள் கூறுகின்ற நிலையில், அதில் முக்கியமானதாக இந்த கண்டல் தாவரம் காணப்படுகின்றது.

குறிப்பாக மீன் மற்றும் இறால் பெருக்கத்திற்கு, கால்நடை உணவுக்கு, கடற்கரையின் பாதுகாப்பிற்கு, கரிய அமில வாயுவின் அளவை குறைப்பதற்கு, கடல் வளங்களைப் பேணுவதற்கு, கடல் நீரைத் தூய்மையாக்குவதற்கு, கடல் வாழ் அங்கிகளின் வாழ்விடமாக, பசளை உற்பத்திக்கு, பறவைகளுக்கு புகலிடமாக, மண் அரிப்பைத் தடுப்பதற்கு என பல்வேறு நன்மைகளை வழங்குகின்ற கண்டல் தாவரமானது, எமது நாட்டிலே தற்போது சுமார் 8000 ஹெக்டெயர் பரப்பளவில் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அது அழிவின் விளிம்பை நோக்கிச் செல்வதால், உடனடியாக கண்டல் தாவர இன பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய தேவையும், கண்டல் தாவரங்களை வளர்க்கும் தேவையும் அத்தியவசியமாக உள்ளது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்பகின்றேன்.

இரண்டாவது ஒழுங்குவிதிகள் முன்மொழிவானது, 1996ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தின் 28வது பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய ஒழுங்குவிதியாகும்.

இது ‘ஸ்பியர்’ எனப்படுகின்ற ஈட்டி பொருத்தப்பட்ட அதாவது கூர் முனை கொண்ட துப்பாக்கி கொண்டு, அல்லது கூர்மையான ஆயுதத்தைக் கையில் கொண்டு, கடற்றொழிலில் ஈடுபடுவதைத் தடை செய்கின்றது.

இந்த முறைமையானது இன்று உலகின் பல்வேறு நாடுகளிலே தடை செய்யப்பட்டு வருகின்ற முறையாகும். கடல் வளத்தை வெகுவாக அழிக்கின்ற இந்த முறைமையினை சூழலியலாளர்கள், அலங்கார மீன் ஆர்வலர்கள், வனஜீவிகள் ஆர்வலர்கள், சுற்றுலாப் பயணிகள் போன்ற பலரும் எதிர்த்து வருகின்றனர். மேற்படி தொழில் முறைமை காரணமாக அலங்கார மீனினங்கள் அழிவடைந்து வருகின்ற நிலைமை மிக அதிகமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மூன்றாவது ஒழுங்குவிதிகள் முன்மொழிவானது, இலங்கையின் உள்ளோ, இலங்கையின் கடல் நீரக வள மூலப் பகுதிகளிலோ ‘தம்புவா’ எனப்படுகின்ற (ஊநிhயடழிhழடளை ளழnநெசயவi) ஒரு வகை விள மீன்களைப் பிடிப்பதானது தடை செய்யப்படுகின்றது.

சுமார் 20 மீற்றர் ஆழ்கடலில் கற்பாறைகளை அண்டியதாக வாழுகின்ற, சூழலுக்கு மிகுந்த நன்மை பயக்கின்ற இந்த அரிய வகை மீனினமும் தற்போது அழிவை நோக்கி வருவதாகவே ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

12 வருட  ஆயுட் காலத்தைக் கொண்ட இந்த மீனினமானது 5 வருடத்தில் முட்டை இட ஆரம்பிக்கின்றது. எனினும், கடற்றொழிலில் ஈடுபடுகின்றவர்கள் இந்த வகை மீனினத்தையும் குறை வயதில் பிடித்து வருவதாலும், அழித்து வருவதாலும் இன்று அழிவு நிலை நோக்கியதாக இந்த மீனினம் இருப்பதால், இவற்றின் மூலமான உற்பத்தியான சிகப்பு இறால் எனப்படும் கடல் இறால் இனமும் அழிவுக்கு உட்பட்டே வருகின்றது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

நான்காவது ஒழுங்குவிதிகள் முன்மொழிவானது, தேசிய நுகர்வுத் தேவைகளுக்காக இறக்குமதி செய்யப்படுகின்ற மீன் வகைகள் மற்றும் கடலுணவு உற்பத்திகளுக்கு உரியதான 1980ஆம் ஆண்டு 26ஆம் இலக்க உணவு சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மற்றும் அதன் கீழ் வகுக்கப்பட்டுள்ள ஏதேனும் கட்டளைகளுக்கு உட்பட்டு, கடற்றொழில் இரையாக பயன்படுத்துவதற்கான உணவு என்ற வகையிலோ, மக்களது நுகர்வுக்காக அல்லது குளிரூட்டப்பட்ட அல்லது குளிரூட்டப்படாத அல்லது ரின்களில் அடைத்த மறைமுக மற்றும் நேரடி நிலை கொண்ட மீனினங்கள் மற்றும் கடலுணவு உற்பத்திகளை இறக்குமதி செய்தல், ஏற்றுமதி செய்தல், மீள் ஏற்றுமதி செய்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்கள் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தில் பதிவு செய்தல் வேண்டும் என்ற ஒழுங்குவிதியினைக் கொண்டுள்ளது.

இது, மேற்படித் துறைகள் சார்ந்த செயற்பாடுகளின்போது, தரத்தைப் பேணுவதற்கும், வினைத்திறன்மிக்க துறைசார் செயற்பாடுகளை தொடர்வதற்கும் அதேநேரம், உள்@ர் கடலுணவு உற்பத்தியாளர்களது சந்தை வாயப்புகளுக்கான நலன் கருதியும் வகுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒழுங்குவிதிகள் முன்மொழிவுகள் (வர்த்தமானி இல.2027ஃ32) எமது அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்திற்கு ஒவ்வாத வகையில் காணப்படுவதால் அவற்றை நீக்கிக் கொள்வதற்கு அனுமதி கோருகின்றேன்.

இதன் ஏழாவது ஒழுங்குவிதிகள் முன்மொழிவானது, எமது நாட்டின் சுற்றுலாத் துறையினை மேம்படுத்தும் நோக்கில் 1985ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21ஆம் திகதியைக் கொண்டதும், 337ஃ48ஆம் இலக்கத்தை உடையதுமான அதி விN~ட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட 1984ஆம் ஆண்டின் கரைவலை கடற்றொழில் ஒழுங்குவிதிகள் ‘அ’ அட்டவணையில் ‘காலி மாவட்டம்’ எனும் தலைப்பின் கீழான 23வது வகையினையும், அதனுடன் தொடர்பான குறிப்பினையும் நீக்குவதன் ஊடாக திருத்தஞ் செய்யப்படுகின்றது.

அதாவது, காலி மாவட்டத்தில் சுற்றுலாப் பயண அபிவிருத்தி ஏற்பாடுகளால் பாதிக்கப்பட்டிருந்த கரைவலை தொழிலாளர்கள், சுற்றுலாத்துறை சார்ந்த தரப்பினருடன் ஏற்படுத்திக் கொண்ட பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்ததன் காரணமாக, மேற்படி தொழிலாளர்கள் அதற்கான இழப்பீடுகளைப் பெற்றுக் கொண்டதால், இந்த நீக்கத்தை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

எட்டாவது ஒழுங்குவிதிகள் முன்மொழிவானது, எமது நாட்டின் தனித்துவமிக்க பொருளாதார வலயத்திற்குள், ஆழ் கடலில் அல்லது வேறொரு நாட்டினது தனித்துவமிக்க பொருளாதார வலயத்திற்குள் ஏதேனும் வெளிநாடொன்றினது கொடியுடன் கூடிய படகுகளில் பணியாற்றுகின்ற எந்தவொரு இலங்கையரும் சட்டவிரோத, அறிக்கையிடப்படாத மற்றும் முறையற்ற கடற்றொழிலில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் வகுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சட்டவிரோத, அறிக்கையிடப்படாத மற்றும் முறையற்ற கடற்றொழிலில் ஈடுபடுகின்ற ஒரு நபரோ அல்லது படகோ இந்த நாட்டுக் கடற் பரப்பிலோ அல்லது வேறு எந்தவொரு நாட்டினதும் கடற் பரப்புகளிலோ கடற் தொழில் செய்வதைத் தடுப்பதன் ஊடாக சட்டவிரோத, அறிக்கையிடப்படாத மற்றும் முறையற்ற கடற்றொழிலை தடுக்கின்ற செயற்பாட்டுக்கு மேலும் வலு சேர்ப்பதாகவே இந்த ஒழுங்குவிதிகள் ஆக்கப்பட்டுள்ளன.

ஒன்பதாவது ஒழுங்குவிதிகள் முன்மொழிவானதும் மேற்படி சட்டவிரோத, அறிக்கையிடப்படாத மற்றும் முறையற்ற கடற்றொழிலை தடுப்பதற்கான ஒழுங்குவிதிகளைக் கொண்டதாகும். அந்த வகையில் படகின் உரிமையாளர் அல்லது பிரதானி படகின் பதிவு ஆவணங்களை அல்லது ஆவணங்களின் பிரதிகளை, தொழில் அனுமதிப் பத்திரங்களை அல்லது அவற்றின் பிரதிகளை தொழிலில் ஈடுபடுகின்ற படகுகளினுள் வைத்திருக்க வேண்டும் என்பதன் ஊடாக சட்டவிரோத, அறிக்கையிடப்படாத மற்றும் முறையற்ற கடற்றொழிலை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும்,

அதேநேரம், தடைசெய்யப்பட்ட தொழில் முறைமைகளை தடுக்கும் வகையில் மின்பிறப்பாக்கிகளை கொண்டு செல்லாமல், 12 வோட் மின்சார வலுவுக்கு மேற்படாத பற்றரியினை பயன்படுத்துவதை உறுதி செய்வதாகவும் அமையக் கூடியதாகும்.

அந்த வகையில், கடற்றொழிற் துறையை மேலும் அறிவியல் ரீதியாக மேம்படுத்தும் நோக்கிலும், சர்வதேச உடன்படிக்கைகளின் விதிமுறைகளுக்கு அமைவாகவாகவும், கடல் வளத்தையும், கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரங்களையும் பேணிப் பாதுகாக்கும் வகையிலும், இங்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள் முன்மொழிவுகளுக்கு உங்கள் அனைவரினதும் ஆதரவு கிட்டும் என எதிர்பார்க்கின்றேன்.

அதேநேரம், எமது நாட்டில் கடற்றொழில் துறையினை  அறிவியல் சார்ந்த, நிலைபேறான துறையாக அபிவிருத்தி செய்வதற்கென மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களும், கௌரவ பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களும் வழங்கிவரும் தலைமைத்துவத்திற்கும், வழிகாட்டல்களுக்கும் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன், என்னுடன் இணைந்து செயற்பட்டு வருகின்ற எனது அமைச்சின் இராஜாங்க அமைச்சர் கௌரவ சனத் நிசாந்த பெரேரா அவர்களுக்கும், அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்க அவர்களுக்கும், மேலதிக செயலாளர்கள் உட்பட அமைச்சு அதிகாரிகளுக்கும், கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் திணைக்களப் பணிப்பாளர் திரு கினிகே பிரசன்ன ஜானக்க குமார உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகளுக்கும், ஏனைய அனைத்து நிறுவனங்களின் பிரதானிகள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு

எமது நாட்டின் கடற்றொழில் துறையை மேம்படுத்தும் பணியில் உங்கள் அனைவரதும் பங்களிப்புகள் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கின்றேன் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்ள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தர் இவ்வாறு தெரிவித்தார்.

நாடாளுமன்றில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் 9 ஒழுங்குவிதிகள் தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts: