அவசர காலச் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்தா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Wednesday, July 31st, 2019

கடந்த உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டிருக்கின்ற அவசர காலச் சட்டமானது, எமது சிறுபான்மை மக்களுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டதைப் போலவே அதன் தற்போதைய செயற்பாடுகளில் இருந்து தெரிய வருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்; நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் அவசரகாலச் சட்டம் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கடந்த உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான பயங்கரவாத செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்ட தரப்பினர், உதவிகள், ஒத்தாசைகள், ஒத்துழைப்புகள் வழங்கியோர் என்ற பெயரில் பலர் கைது செய்யப்பட்டு, தடுப்புகளில் வைக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

இனிமேல், இத்தகையதொரு தாக்குதல் இடம்பெற வாய்ப்பில்லை என  ஒரு தரப்பினர் கூறுகின்ற நிலையில், அப்படிக் கூறுவது முட்டாள்த் தனம் என்றும், தாக்குதல் ஆபத்து இன்னும் முடிவுறவில்லை என்றும், தனிநபர் தாக்குதல்கள் இடம்பெறலாம் என்றும் இன்னும் ஒரு தரப்பால் கூறப்பட்டும் வருகின்றது.

இத்தகைய முரண்பாட்டு ரீதியிலான கருத்துக்கள் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், இந்த நாட்டின் தேசிய பாதுகாப்புப் தொடர்பில் உறுதியான விடயங்களை அறிவிப்பது யார்? என்பது தெரியாத ஒரு நிலையில் மக்கள் வாழுகின்ற அதேவேளை, எமது மக்களது வாழ்க்கை தொடர்பிலான தடைகள் பலவும் இந்த அவசரகாலச் சட்டம் அமுலில் இருக்கின்ற காலகட்டத்திற்குள் அவசர, அவசரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றனவா? என்ற சந்தேகம் எமது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்த நாட்டில் பரவலாக மத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பிலான வலியத் திணிக்கப்படுகின்ற பிரச்சினைகள் பலவும் இந்தக் காலகட்டத்திற்குள் மிகவும் அதிகரித்து விட்டுள்ளன.

கன்னியாவாகட்டும், செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோவிலாகட்டும், மலையகத்திலே மாடசாமி கோவிலாகட்டும், ஒட்டுசுட்டான் அலங்கார முருகன் கோவிலாகட்டும் இப்படி நிறையவே மத வழிபாட்டுத் தலங்கள் சார்ந்து பிரச்சினைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

தென்னை மரத்தில் தேள் கொட்ட, பனை மரத்தில் நெறி கட்டியதைப்போல்” உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்த பகுதிகளில் எல்லாம் மக்கள் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்க, வவுனியா பஸ் தரிப்பு நிலையத்தில் கடந்த 3 மாத காலமாகப் பயணிகள் அனைவரும் பலத்த சோதனைகளுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.

பஸ்சின் கதவுகளைப் பூட்டி பயணிகளை உள்ளே இருக்க வைத்து சித்திரவதைகள் செய்து வருகின்றனர். வவுனியா பஸ் தரிப்பு நிலையத்தில்தான் பயங்கரவாதிகளின் ஆயுதக் கிடங்கு இருந்தததைப் போல், அவசரகாலச் சட்டமானது வவுனியா பஸ் தரிப்பு நிலையத்தில் மட்டுந்தான் நடைமுறைப் படுத்தப்படுவதுபோல், அந்தளவிற்கு அதிகமான கெடுபிடிகளுக்கு எமது மக்கள் முகங்கொடுத்து வருகின்றனர்.

அவசர காலச் சட்டத்தினை அமுல்படுத்துகின்றபோது அதனை மனிதாபிமான முகத்துடன் செயற்படுத்த வேண்டும் என எவ்வளவுதான் கோரிக்கை விடுத்தாலும், நாயின் வாலை நிமிர்த்த முடியாது’ என்பதுபோல், அது தனது கொள்கையை விட்டுக் கொடுக்காது தனது வழமை போன்ற செயற்பாட்டையே கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக எமது அப்பாவி மக்களே நாளாந்தம் பல்வேறு இடையூறுகளுக்கு ஆட்பட்டு வருகின்றனர்.

சாதாரண சட்டங்கள் செயற்பாட்டில் உள்ள நிலையில், பிரவேசிக்க இயலாத இலக்குகளுக்கு எல்லாம் அவசரகாலச் சட்டம் அமுலில் இருக்கின்றபோது பிரவேசிக்க இயலும் என்கின்ற நிலைமையே இன்று இந்த நாட்டில் நிலவி வருகின்றது.

இந்த பிரவேசமானது இன்று வெளிநாட்டு சக்திகளின் உள்நாட்டு விவகாரங்களுக்கான தலையீட்டு பிரவேசங்களாகவும் மாறிவிட்டுள்ளன என்றே கருதுவதற்கு நேரிட்டுள்ளது.

Related posts:


முன்னாள் போராளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதிலுள்ள தடைகள் என்ன? நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ்...
ஆச்சே கடலில் தத்தளிக்கும் தமிழர்களை மனிதாபிமானத்துடன் நடத்துங்கள் - இந்தோனேசிய ஜனாதிபதிக்கு டக்ளஸ் ...
இறக்குமதிக் கனவுகளில் மிதந்தால் நாட்டை எவராலும் காப்பாற்ற முடியாது போய்விடும் - நாடாளுமன்றில் செயலாள...