வீணைக்கு ஆணை வழங்கினால் எமக்கு கிடைக்கும் அதிகாரத்திற்கு வானமே எல்லை – டக்ளஸ் தேவானந்தா!

வீணைச் சின்னத்திலான எமது கட்சி வெற்றிபெறும் பட்சத்தில் எமக்கான அதிகாரத்தின் எல்லை வானமாகத்தான் இருக்க முடியும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்பாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாம் ஈட்டிக்கொள்கின்ற வெற்றியின் அத்திவாரமாகவே இன்றைய கூட்டத்தை நான் நோக்குகின்றேன்.
நாம் பல சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கும் முகங்கொடுத்து மக்களின் நலன்சார்ந்த பல்வேறு செயற்றிட்டங்களை செயற்படுத்திக்காட்டியுள்ளோம். இந்த தேர்தலில் நாம் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடனான உழைப்பை பயன்படுத்தி வெற்றியையே எமது தாரகமந்திரமாக கொண்டு செயற்படுவோம்.
அந்தவகையில் மக்களின் வெற்றியே வீணையின் வெற்றியாகவும் வீணையின் வெற்றியே மக்களின் வெற்றியாகவும் மக்களிடம் எமது கருத்துக்களை முன்கொண்டு செல்வோம்.
குறிப்பாக ஒவ்வொரு வாக்கும் பெறுமதியானவை என்பதுடன் வாக்களிப்பதன் அவசியத்தை மக்களுக்கு தெளிவு படுத்தவேண்டியதும் மக்களுக்கு வலியுறுத்தவேண்டும். அந்தவகையில் ஈ.பி.டி.பி வேறு மக்கள் வேறு என்றோ அல்லது மக்கள் வேறு ஈ.பி.டி.பி வேறு என்றோ அல்ல என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தல் வேண்டும்.
ஈ.பி.டி.பியின் வெற்றியென்பது மக்களின் வெற்றியென்பதையும் ஒவ்வொருவருக்கும் உணர்த்தவேண்டும். நாம் எப்போதும் மக்களுடன் இருந்து மக்களுக்கான சேவைகளை எந்த நெருக்கடியான காலகட்டங்களிலும் முன்னெடுத்து வந்திருக்கின்றோம் என்பதை மக்கள் தெரிந்துகொண்டுள்ளபோதிலும் எம்மால் கடந்தகாலங்களில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் உள்ளிட்ட மக்கள் நலன்சார்ந்த விடயங்கள் தொடர்பாகவும் மக்களிடம் எடுத்துக்கூறவேண்டும்.
அதுமட்டுமன்றி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்கள் எமக்கு பூரண அதரவுப்பலத்தைத்தந்து எமது வெற்றியை உறுதிசெய்வார்களேயானால் நிச்சயம் மக்களின் வாழ்வில் பாரிய மாற்றங்களையும் ஏற்றங்களையும் நிச்சயம் எம்மால் ஏற்படுத்த முடியும்
அந்தவகையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் வீணைச்சின்னத்திலான எமது கட்சி வெற்றிபெறும் பட்சத்தில் எமது அதிகாரத்தின் எல்லை நிச்சயம் வானமாகத்தான் இருக்க முடியும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்
Related posts:
|
|